search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில்நுட்பத்தால் வறுமையை வெல்லலாம்: புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் மோடி பேச்சு
    X

    தொழில்நுட்பத்தால் வறுமையை வெல்லலாம்: புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் மோடி பேச்சு

    ஏழைகளுக்கான அதிகாரம் வழங்குவதில் தொழில்நுட்பத்தை புகுத்தினால் வறுமையை வெல்லலாம் என புல்லட் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
    அகமதாபாத்:

    நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் கலந்துகொண்டனர்.

    புல்லட் ரயில் திட்டப்பணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஷின்ஸோ அபே அடிக்கல் நாட்டினர். பின்னர் மோடி பேசியதாவது:-

    போக்குவரத்து என்பது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா மட்டுமல்ல, நாடே வளர்ச்சி அடைய புல்லட் ரயில் திட்டம் உதவும். இந்தியாவில் விரைவாக புல்லட் ரயில் கொண்டு வர உதவிய ஷின்ஷோ அபேவிற்கு நன்றி. இந்தியாவின் மிகச்சிறந்த நட்பு நாடாக ஜப்பான் எப்போதும் இருக்கும்.

    இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகியுள்ளது. புல்லட் ரெயில் திட்டத்தினால் குஜராத் - மகாராஷ்டிரா மட்டுமில்லாமல் நாடே வளர்ச்சி பெறும்.  புல்லட் ரயில் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

    எங்கு அதிவேகமான வளர்ச்சி இருக்கிறதோ, அங்கு அடுத்த தலைமுறை வேகமாக வளரும். ஏழைகளுக்கான அதிகாரம் வழங்குவதில் நாம் தொழில்நுட்பத்தை புகுத்தினால் வறுமையை வெல்லலாம். இந்த திட்டத்திற்காக ஜப்பான் குறைந்த வட்டியிலான கடன் வழங்கியுள்ளது. அதுவும் ஐம்பது ஆண்டுகளில் கடனை திருப்பி அளிக்கும் வண்ணம் இருக்கிறது.

    2022-23-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும். அப்போது, நானும் பிரதமரும் (ஷின்ஸோ அபே) புல்லட் ரெயிலை தொடங்கி வைப்போம். நமது நாட்டில் உள்ள அனைத்து ரெயில்களிலும் ஒருவாரம் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஜப்பானின் மக்கள் தொகைக்கு ஈடானது.

    இவ்வாறு மோடி பேசினார்.
    Next Story
    ×