search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா: இர்மா புயலால் புளோரிடா தீவில் சிக்கித்தவித்த 110 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
    X

    அமெரிக்கா: இர்மா புயலால் புளோரிடா தீவில் சிக்கித்தவித்த 110 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

    அமெரிக்காவின் புளோரிடா பகுதிகளில் உள்ள தீவுகளில் இர்மா புயலால் சிக்கித்தவித்த 110 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    புதுடெல்லி:

    அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். புளோரிடாவை தொடர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் இர்மா புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்பட சுமார் 63 லட்சம் மக்களை வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இர்மா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிவதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் மையத்தை அமைத்துள்ளது.

    இந்நிலையில், புளோரிடா பகுதியில் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சிண்ட் மார்டேன் தீவில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் சிக்கித்தவித்தனர். அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.

    அங்கு சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக இந்திய அரசு சார்பில்  சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானம் மூலம் சுமார் 110 பேர் சிண்ட் மார்டேன் தீவில் இருந்து கரீபியன் தீவுகளில் ஒன்றான குராகவோவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார். 
    Next Story
    ×