search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதித்த தடையை தளர்த்தியது சுப்ரீம் கோர்ட்
    X

    டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதித்த தடையை தளர்த்தியது சுப்ரீம் கோர்ட்

    காற்று மாசுபாட்டை குறைக்கும் முயற்சியாக டெல்லி- என்.சி.ஆர் பகுதிகளில் பட்டாசுகள் விற்பனை செய்ய விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு கடுமையான பனிப்புகை மூட்டம் (பனிமூட்டமும், புகையும் கலந்த கலவை) நிலவியது. குறிப்பாக காலை நேரத்தில் பனிப்புகை மிகமோசமாக இருந்தது.

    தீபாவளி பண்டிகையின்போது, டெல்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக, அங்கு கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டது. காற்று மாசுபாடும் ஏற்பட்டதால், தீபாவளி முடிந்து சுமார் 2 வாரங்களுக்கும் மேலாக, பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    இதையடுத்து, தலைநகரில் சுற்றுச்சூழலை சீர்படுத்தும் முயற்சிகள், தேசிய பசுமை தீர்ப்பாயம், டெல்லி மற்றும் மத்திய அரசுகள் மேற்கொண்டன. இதன் ஒருபகுதியாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கின்பேரில், டெல்லி மற்றும் புறநகரில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாசு விற்பனை உரிமங்களை ரத்து செய்யவும், புதியதாக பட்டாசு விற்பனை உரிமங்கள் வழங்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும் என்றும் கடந்த 11-11-2016 அன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இந்த தடை உத்தரவை எதிர்த்து பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.கே. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, தலைநகருக்கு உட்பட்ட (NCR) டெல்லி பகுதியில் பட்டாசு விற்பனைக்கு முன்னர் விதித்த தடையை தளர்த்தி இன்று உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளித்த லைசென்ஸ் எண்ணிக்கையை 500-லிருந்து 250-ஆக குறைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது டெல்லியில் உள்ள வியாபாரிகளிடம் கைவசமுள்ள பட்டாசு இருப்பு சுமார் 50 லட்சம் கிலோ அளவுக்கு உள்ளது. எனவே, வரும் தசரா மற்றும் தீபாவளி தேவையை நிறைவுசெய்ய இது போதுமானதாக உள்ளதால் வெளியில் இருந்து டெல்லிக்குள் மேலும் பட்டாசுகள் கொண்டு வரப்படுவதை தடுக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்பட அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் நூறு மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தனிநபராக இல்லாமல் குழுவாக பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் தசரா மற்றும் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்புகள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் தலைமையிலான குழு தொடர்ந்து கண்காணித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னர் ரத்து செய்யப்பட்ட நிரந்தர பட்டாசு விற்பனை உரிமங்களை புதுப்பிப்பது தொடர்பான முடிவை சுப்ரீம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×