search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமானத்தை மீறி சொத்து குவிப்பு: 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
    X

    வருமானத்தை மீறி சொத்து குவிப்பு: 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

    வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆதாரங்களை சுப்ரீம் கோர்ட்டில் நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று தாக்கல் செய்தது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் “லோக் பிரகாரி” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது.

    இந்த நிறுவனம் நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்பதை ஆய்வு செய்தது.

    தேர்தலில் போட்டியிட்டபோது மனுதாக்கலில் குறிப்பிடப்பட்ட சொத்து எவ்வளவு, தற்போது உள்ள சொத்து எவ்வளவு என்ற அடிப்படையில் நடந்தது. அப்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள், 257 எம்.எல்.ஏ.க்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதை கண்டுபிடித்தது.

    இதுபற்றி அந்த அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. அதில், “37 எம்.பி.க்கள், 257 எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் திடீரென இவ்வளவு சொத்துக்கள் வந்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பி இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் சார்பில் வக்கீல் ஆஜராகி கூறியதாவது:-

    மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தது. அப்போது 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்கள் கணிசமாக உயர்ந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் விசாரணை வளையத்துக்குள் வர இருக்கும் 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்கள் யார்-யார் என்று தெரியவில்லை. அவர்களை பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டு அந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அனைத்து கட்சி தலைவர்களிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த 7 எம்.பி.க்கள், 98 எம்.எல்.ஏ.க்கள் தவிர மேலும் 20 எம்.பி.க்கள், 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களை நேரடி வரி விதிப்பு ஆணையம் மதிப்பிட்டு வருகிறது. விரைவில் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்புள்ளது.
    Next Story
    ×