search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்யாதவுக்கு எதிராக நிதிஷ்குமார் தேர்தல் கமி‌ஷனில் மனு
    X

    சரத்யாதவுக்கு எதிராக நிதிஷ்குமார் தேர்தல் கமி‌ஷனில் மனு

    ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பாக சரத்யாதவுக்கு எதிராக நிதிஷ்குமார் சார்பில் மூத்த தலைவர்கள் கே.சி.தியாகி, ஆர்.சி.பி.சிங் தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுத்தனர்.
    புதுடெல்லி:

    பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் லல்லுபிரசாத் யாதவுடனான உறவை முறித்துக்கொண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார்.

    இதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும், கட்சியின் சின்னத்துக்கும் உரிமை கோரி டெல்லியில் தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுத்துள்ளார். தாங்கள் தான் உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என்றும் தங்களுக்கே சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.

    இதையடுத்து நிதிஷ்குமார் சார்பிலும் மூத்த தலைவர்கள் கே.சி.தியாகி, ஆர்.சி.பி.சிங் ஆகியோர் நேற்று டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை சந்தித்து சரத்யாதவுக்கு எதிராக மனு கொடுத்தனர்.

    அதில் தங்கள் பக்கம் 71 எம்.எல்.ஏ.க்கள், 30 எம்.எல்.சி.க்கள், 2 மக்களவை எம்.பி.க்கள் 9 மேல் சபை எம்.பி.க்கள் உள்ளனர் என்றும் கட்சியின் மத்திய கவுன்சில் நிர்வாகிகள் 20 பேரில் 16 பேர் தங்கள் பக்கம் இருப்பதாகவும் 22 மாநில தலைவர்களில் 16 பேரும், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் 180 பேரில் 143 பேர் தங்கள் பக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் கே.சி.தியாகி கூறுகையில், கட்சி தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் கமி‌ஷனில் கொடுத் துள்ள மனுவில் அதற்கான எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. பிரமாணபத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை எனவே சரத்யாதவ் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் நிராகரிக்க வேண்டும். சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங்குக்கும், அகிலேஷ் யாதவ்க்கும் பிளவு ஏற்பட்டபோது அகிலேஷ் யாதவ் பக்கம் கட்சி இருப்பதாக தேர்தல் கமி‌ஷன் அனுமதித்தது. இப்போது அகிலேஷ் யாதவை விட எங்கள் பக்கம் கூடுதல் பலம் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கட்சி நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர் என்றார்.

    மேலும் கே.சி. தியாகி கையில் சமாஜ்வாடியில் முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்தார். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சரத்யாதவ் தலைவராக இல்லை, அவர் பக்கம் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை என்றார்.

    இதற்கிடையே நிதிஷ் குமார் ஆதரவு நிர்வாகிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதால் சரத்யாதவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே சரத்யாதவ் பாராளுமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


    Next Story
    ×