search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் எந்த பயனும் கிடைக்கவில்லை: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் புகார்
    X

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் எந்த பயனும் கிடைக்கவில்லை: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் புகார்

    பணமதிப்பு குறைப்பு திட்டம் கருப்பு பணத்தையோ அல்லது வெள்ளை பணத்தையோ எதையும் செய்யவில்லை என்று ரகுராம்ராஜன் கூறினார்.

    மும்பை:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு திட்டம் முன்வைக்கப்பட்டது. அப்போது இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது சரியான பலனை தராது, நீண்ட கால பலனையும் எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தேன். அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    நான் ஒரு அதிகாரி என்ற முறையில் எனது கருத்தைத்தான் கூற முடியும். அரசு கொள்கைகளை எதிர்க்க முடியாது. ஒருவேளை அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தால் வேண்டுமானால் பதவியை ராஜினாமா செய்யலாம். இதுதான் இறுதி ஆயுதம். இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

    ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு செய்ததால் பெரிய அளவில் எந்த நல்லபலனும் கிடைக்கவில்லை. ரூபாய் நோட்டை ஒழிக்கும்போது அதற்கு ஏற்றாற்போல புதிய ரூபாய் நோட்டுகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் பொருளாதார நிலை பாதித்துவிட்டது. மந்த நிலையை உருவாக்கி விட்டது.


    ஆனாலும் இந்திய மக்கள் சிறப்பானவர்கள். எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். தங்களை சுற்றி எது நடந்தாலும் அதற்கு உரிய வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்துக் கொள்கிறார்கள்.

    ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டம் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் அமல்படுத்தப்பட்டது. ஆனால் கருப்பு பணத்தை கைப்பற்ற முடியவில்லை. நமது நடைமுறைகளால் அவை இன்னும் வராமல்தான் உள்ளது. கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் இதன் மூலம் புதிய வட்டிகளை பெற்று வருகிறார்கள். இந்த பிரச்சினையால் ரிசர்வ் வங்கியின் ஈவு தொகை கூட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

    பணமதிப்பு குறைப்பு நடவடிக்கைக்கு பதிலாக பல்வேறு சிறந்த மாற்றுவழிகள் உள்ளன. ஆனால் அதை பயன்படுத்துவது பற்றி சிந்திக்கவில்லை. இதே கருத்தைத்தான் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டியும் கூறியிருக்கிறார்.

    பணமதிப்பு குறைப்பு திட்டம் கருப்பு பணத்தையோ அல்லது வெள்ளை பணத்தையோ எதையும் செய்யவில்லை. மக்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை வேண்டுமானால் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

    இந்த திட்டம் கொண்டுவந்தது ஒரு கடுமையான நடவடிக்கை ஆகும். இதனால் வர்த்தகங்கள் பாதிப்படைந்துள்ளன. வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் தற்போது சற்று நிலையற்ற தன்மை இருந்தாலும், எதிர்காலத்தில் வளர்ச்சி ஏற்படும்.

    எனக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிகாலம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த பதவி ஏன் நீடிக்கப்படவில்லை என்பது பற்றி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. எனது பதவி காலம் முடிந்ததையடுத்து நான் வெளியேறிவிட்டேன். நான் ராஜினாமா எதுவும் செய்யவில்லை.

    டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த கருத்தரங்கில் நான் ஹிட்லரை ஒப்பிட்டு சில கருத்துக்களை சொன்னது தவறானது. சகிப்பு தன்மை பற்றி பேசும்போது அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். சகிப்பு தன்மை என்பது வளர்ச்சிக்கு முக்கியமானது. நான் எனது திட்டங்களில் ஒதுபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

    நான் இந்த நாட்டுக்கு வெளிப்படையாக சேவை செய்ய விரும்புகிறேன். எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை செய்வேன்.

    ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது சில வராக்கடன்களை வசூலிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்தேன். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட முடியவில்லை. ஏன்என்றால் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

    வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் சிறப்பான ஒன்று. வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பொருளாதாரம் பாதித்திடாத வகையில் மென்மையான நிலையில் இதை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×