search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல்வாதிகளின் சொத்துகள் 500 சதவீதம் உயர்வு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி
    X

    அரசியல்வாதிகளின் சொத்துகள் 500 சதவீதம் உயர்வு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி

    அரசியல்வாதிகளின் சொத்துகள் 500 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
    புதுடெல்லி:

    நமது நாட்டில் சட்டசபை, மேல்-சபை, பாராளுமன்றம், டெல்லி மேல்-சபை தேர்தல்களில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவுடன் சொத்து விவரத்தை தெரிவிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையின்படி, வேட்பாளர்கள் தங்களது அசையும், அசையா சொத்து விவரம், குடும்பத்தினரின் சொத்து விவரங்களை தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அந்த சொத்துகள் எப்படி வந்தன என்பதற்கான ஆதாரத்தை தெரிவிப்பதில்லை.

    இந்த ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் என்பதை நடை முறைப்படுத்த வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் லோக் பிரஹாரி (பொது கண்காணிப்பு) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், “நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் ஒன்றிணைந்த அங்கம். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளிக்கிற எந்த உத்தரவையும் அரசு வரவேற்கும். தூய்மை இந்தியா திட்டம் குப்பையை அகற்றுவது மட்டுமல்ல, இதையும் உள்ளடக்கியதுதான்” என குறிப்பிட்டார்.

    ஆனால் இந்த வழக்கு தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூலம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் முழுமையானதாக இல்லை என்பதில் நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    அப்போது நீதிபதிகள், “மத்திய நேரடி வரிகள் வாரியம் தாக்கல் செய்துள்ள தகவல்கள் முழுமையானவை அல்ல. இதுதான் இந்திய அரசின் அணுகுமுறையா? இதுவரை நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?” என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

    மேலும், “தேர்தல் சீர்திருத்தங்கள் செய்வதற்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என அரசாங்கம் சொல்கிறது. அப்படியென்றால் தேவையான தகவல்களை ஆவணமாக தர வேண்டும்” என கண்டிப்புடன் கூறினர்.

    வழக்கு தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், அரசியல்வாதிகள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல், 2 தேர்தல்களுக்கு இடையே 500 சதவீத அளவுக்கு தடாலடியாக உயர்ந்திருப்பது குறித்து கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வக்கீல் சுட்டிக்காட்டினார்.

    அப்போது நீதிபதிகள், “அதில் தகவல்கள் முழுமையாக இல்லை. கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறபோது, அது தொடர்பான அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினர்.

    மேலும், “நீங்கள் (மத்திய அரசு) தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம், தட்டச்சு செய்த காகிதங்கள்தான். வேறொன்றும் அதில் இல்லை. தெளிவில்லாத தகவல்களை தராதீர்கள். மத்திய நேரடி வரிகள் வாரியம், இதில் (அரசியல்வாதிகளின் சொத்துகள் 500 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பது தொடர்பாக) என்ன நடவடிக்கை எடுத்தது? நடவடிக்கை எடுத்திருந்தால் அதை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும். அதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கருதினால், ஏன் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்பதற்கான காரணங்களுடன், அந்த தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டனர்.

    அப்போது மத்திய அரசின் வக்கீல், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவுரை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

    இந்த வழக்கில் இன்று விசாரணை தொடர்கிறது.
    Next Story
    ×