search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
    X

    ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

    மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறும் ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    மியான்மர் நாட்டில் உள்ள ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பவுத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.

    பாதுகாப்பு படையினருக்கும் ரோஹிங்யா போராளிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் நடைபெற்று வரும் நிலையில், ரோஹிங்யா முஸ்லீம்கள் அகதிகளாக எல்லைப் பகுதியில் வெளியேறி வருகின்றனர். அதிக அளவில் வங்கதேசத்துக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்யா முஸ்லீம்களை மீண்டும் மியான்மர் திருப்பி அனுப்பும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இது சர்வதேச மனித உரிமை மாநாடுகளின் பரிந்துரைகள் மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அகதிகளை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
    Next Story
    ×