search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் கொடூரம்: 4000 ரூபாய்க்காக கூலித் தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த பண்ணை உரிமையாளர்
    X

    கர்நாடகாவில் கொடூரம்: 4000 ரூபாய்க்காக கூலித் தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த பண்ணை உரிமையாளர்

    கர்நாடக மாநிலத்தில் கடன் வாங்கிய 4,000 ரூபாயை திருப்பி தராத கூலித் தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த பண்ணை உரிமையாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிகேரி என்ற பகுதியை சேர்ந்தவர் கிஷன். பண்ணை உரிமையாளரான இவரிடம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ஹரிஷ்(32). சமீபத்தில் இவர் வேலையை விட்டு நின்றுவிட்டார். முன்னதாக, கிஷனிடம் 4000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார் ஹரீஷ். ஆனால் அதை திருப்பி தரவில்லை. இதற்கிடையே, உறவினர் ஆரம்பித்த கடையில் ஹரிஷ் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்நிலையில், கடந்த 29-ம் தேதி தன்னிடம் கடனாக வாங்கிய 4,000 ரூபாயை திருப்பிக் கேட்க கிஷன் தனது நண்பருடன் ஹரிஷ் கடைக்கு சென்றார். ஆனால் தன்னிடம் பணம் இல்லாததால் ஹரிஷ் திருப்பித் தரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிஷன், ஹரிஷை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கினார். அத்துடன், அவரை தனது தோட்டத்துக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த நாய் கூண்டில் அடைத்து வைத்தார். கூண்டில் இருந்த நாய்கள் அவரை கடித்ததில் ஹரிஷுக்கு காயம் ஏற்பட்டது.

    சிறிது நேரம் கழித்து கிஷன் அவரை விடுவித்தார். ஹரிஷ் உடனே மருத்துவமனை சென்று முதலுதவி சிகிச்சை பெற்றார். அதன்பின் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடனை திருப்பித் தராத கூலி தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்த பண்ணை உரிமையாளரின் செயல் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×