search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினமும் காலையில் ஒலிக்கும் தேசிய கீதம் - சல்யூட் அடித்து மரியாதை செலுத்தும் கிராமத்தினர்
    X

    தினமும் காலையில் ஒலிக்கும் தேசிய கீதம் - சல்யூட் அடித்து மரியாதை செலுத்தும் கிராமத்தினர்

    தெலுங்கானா மாநிலம் ஜம்மிகுந்தா கிராமத்தில் தினமும் காலை 7.54 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பாகிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் மட்டுமின்றி, கிராமத்திலுள்ள அனைவரும் சல்யூட் அடித்து தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    ஐதராபாத்:

    சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் அரசு விழாக்கள், பள்ளிகளின் ஆண்டுவிழாக்களில் தான் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும். அந்த நேரத்தில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பொதுமக்களும் எழுந்து நின்று சல்யூட் அடித்து தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட் சினிமா தியேட்டர்களில் கட்டாயம் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது அனைத்து தியேட்டர்களிலும் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜம்மிகுந்தா கிராமத்தில் தினமும் காலை 7.54 மணிக்கு தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதற்காக கிராமம் முழுவதிலும் 16 பெரிய ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேசிய கீதம் ஒலிபரப்பாகும் சமயத்தில், பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி சாலையில் நடந்து செல்வோர், பஸ்சில் பயணம் செய்வோர், வாகனங்களில் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தங்களது வேலைகளை ஒதுக்கிவிட்டு தேசிய கீதத்துக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    கிராம மக்களிடம் தேசப்பற்றை வளர்க்கும் விதமாகவே இந்த முயற்சியை எடுத்துள்ளதாக ஜம்மிகுந்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தேசிய கீதத்தின் மதிப்பை கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். தேசிய கீதம் ஒலிபரப்பப்படுவதால் குற்றங்கள் நடப்பது குறைய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை எடுத்துள்ளேன். சினிமா தியேட்டர்கள், ஹால்களில் மட்டும் தேசிய கீதம் ஒலிபரப்பானால் போதாது. ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய கீதம் காலையில் ஒலிபரப்பாக வேண்டும். தேசிய கீதத்தை கேட்டு முடித்ததும் புத்துணர்ச்சி ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    அவரது முயற்சிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×