search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிசபை நாளை மாற்றம் - 8 புதிய மந்திரிகள் பதவியேற்க வாய்ப்பு
    X

    மத்திய மந்திரிசபை நாளை மாற்றம் - 8 புதிய மந்திரிகள் பதவியேற்க வாய்ப்பு

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை மூன்றாவது முறையாக நாளை மாற்றி அமைக்கப்படுகிறது. 8 புதிய மந்திரிகள் பதவியேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் பிரதமர் மோடி தலைமையில் 41 மந்திரிகள் பதவியேற்றனர். இதனையடுத்து, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர், இரண்டு முறை சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு, தான் எதிர்பார்த்த அளவு திறம்பட செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய மந்திரிகளை நியமிப்பது குறித்தும், நிதி மந்திரி அருண்ஜெட்லி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஹர்ஷ வர்தன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோரிடம் இருக்கும் கூடுதல் இலாகாக்களை பகிர்ந்து அளிப்பது பற்றியும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் நேற்று முன்தினம் அவர் விரிவாக விவாதித்தார்.

    இதைத்தொடர்ந்து, பிரதமர் மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக ராஜாங்க மந்திரிகளான ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்-தனி பொறுப்பு), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளத்துறை), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்ப நலம்), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

    மேலும் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா, உருக்கு துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங், ராஜாங்க மந்திரி உபேந்திர குஷ்வாகா (மனிதவள மேம்பாடு) ஆகியோர் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய மந்திரிசபையை மாற்றி அமைக்கிறார்.

    ‘பிரிக்ஸ்‘ நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் நாளை பிற்பகல் சீனா புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்னதாக நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

    பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தா, பிரகலாத் பட்டேல், சுரேஷ் அங்காடி, சத்யபால் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து இருப்பதால், அந்த கட்சிக்கும் மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்படுகிறது. ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஆர்.சி.பி.சிங், சந்தோஷ்குமார் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஆர்.சி.பி.சிங் டெல்லி மேல்-சபை ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

    மந்திரிசபை மாற்றத்தின் போது, தற்போது தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாக இருக்கும் பியூஷ் கோயல் (மின்சாரம், நிலக்கரி, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி), நிர்மலா சீதாராமன் (வர்த்தகம் மற்றும் தொழில்) ஆகியோர் கேபினட் மந்திரிகளாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுக்கு மந்திரிசபையில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் குழப்பம் நீடிப்பதால், அந்த கட்சியைச் சேர்ந்த யாரும் மந்திரிசபையில் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரியாக இருக்கும் நிதின் கட்காரிக்கு கூடுதல் பொறுப்பாக ரெயில்வே இலாகா வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றது. அதன்பிறகு மோடி தனது மந்திரிசபையை மாற்றி அமைப்பது இது 3-வது முறை ஆகும்.

    தற்போது பிரதமர் உள்பட 73 மந்திரிகள் உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், அதிகபட்சமாக 81 பேர் வரை மந்திரிசபையில் இடம்பெறலாம். எனவே எட்டு பேர் புதிய மந்திரிகளாக பதிவியேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
    Next Story
    ×