search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைசூர் மாகாணத்தின் மீது யாருடைய கட்டாயமும் செலுத்தப்படவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
    X

    மைசூர் மாகாணத்தின் மீது யாருடைய கட்டாயமும் செலுத்தப்படவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

    காவிரி நீர்பங்கீடு ஒப்பந்தங்களில் மைசூர் மாகாணத்தின் மீது யாருடைய செல்வாக்கும், கட்டாயமும் செலுத்தப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வாதம் முன்வைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    இதில் கர்நாடகம், கேரள அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று 10-வது நாளாக தமிழக அரசின் வாதம் தொடர்ந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

    1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களில், மதராஸ் மாகாணம் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஒருதரப்புக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், அந்த ஒப்பந்தம் இன்று செல்லாது என்றும் கர்நாடகா தரப்பில் வாதங்களை முன்வைத்தார்கள்.

    அது மிகவும் தவறான வாதமாகும். அன்றைய நிலையில் பிரிட்டிஷ் அரசு மீது எவ்வகையான செல்வாக்கும் செலுத்த முடியாத நிலையும், மைசூர் மகாராஜாவை எந்த வகையிலும் கட்டாயப்படுத்த முடியாத நிலையுமே இருந்தது.

    இந்த இரு ஒப்பந்தங்கள் தொடர்பான வரலாற்றை ஆராயும்போது இவை கட்டாயத்தின் பேரிலோ நிர்ப்பந்தத்தின் பேரிலோ செய்யப்பட்டதாக எவ்வித தடயமும் இல்லை. இரு ஒப்பந்தங்களையும் மைசூர் மாகாணம் தன்னிச்சையாகவே ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே கர்நாடகாவின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த ஒப்பந்தத்தை கர்நாடக அரசு 1974-ம் ஆண்டுவரை எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றி வந்தது. 1924-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் சுதந்திரம் அடைந்த பிறகும் உறுதிப்படுத்தப்பட்டது. 1950-ம் ஆண்டில் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க மைசூர் மாகாணத்துக்கு 2 ஆண்டுகள் காலஅவகாசம் கிடைத்தது.

    1924-ம் ஆண்டின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மைசூருக்கு தேவையானது கிடைத்து வந்தது. கிருஷ்ணராஜசாகர் அணையில் தங்களுக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்வது மட்டுமின்றி, வருங்காலத்துக்கான நீர்ப்பாசன பகுதிகளையும் வரையறுத்துக்கொள்ளும் வகையில் நீர்பங்கீட்டுக்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. கூடுதலாக 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் மதராஸ் மாகாணத்துக்கு அளிக்கப்பட்ட உரிமைகளில் சிலவற்றை 1924 ஒப்பந்தம் மறுத்ததை காவிரி நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டிருந்தது.

    இதற்கு நீதிபதிகள், 1956-ல் கர்நாடக மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு இந்த ஒப்பந்தங்கள் செல்லுப்படியாகுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு திவிவேதி, இந்த ஒப்பந்தங்கள் 1956-க்கு பிறகு செல்லுப்படியாகாது என்று அறிவிக்க கர்நாடக மாநிலம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் எப்போதும் வழக்கு தொடுத்தது இல்லை. இதன் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்கள் செல்லுப்படியாகும் என்றார்.

    இந்த வழக்கின் மீதான வாதங்கள் மீண்டும் 5-ந் தேதி தொடரும் என்று நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×