search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரத்தில் தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் கூட்டம்
    X

    திருவனந்தபுரத்தில் தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் கூட்டம்

    தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளை ஒடுக்குவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் வருகிற செப்டம்பர் மாதம் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னோடியாக மண்டலம் வாரியாக போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் பங்கேற்கிறார்கள்.

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரனும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தமிழக, கேரள, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையோர காட்டுப் பகுதிகளில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இவர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தி அரசு சொத்துக்களுக்கு சேதகம் ஏற்படுத்துகிறார்கள்.

    எனவே இந்த மாவோயிஸ்டு தீவிரவாதிகளை அனைத்து மாநில போலீசாரும் ஒன்றிணைந்து ஒடுக்குவது பற்றியும், ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் இணைந்தவர்கள் பற்றி நடந்துள்ள விசாரணைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    மேலும் தென்மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையும் அனுப்பப்படுகிறது.
    Next Story
    ×