search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்லட் ரெயில் கனவை கைவிட்டு பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துங்கள் - மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை
    X

    புல்லட் ரெயில் கனவை கைவிட்டு பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துங்கள் - மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை

    உ.பி. மாநிலத்தில் இந்த வாரம் நடந்த இரு ரெயில் விபத்துகளைத் அடுத்து, 'புல்லட் ரெயில் கனவை கைவிட்டு, பாதுகாப்பு விசயத்தில் கவனம் செலுத்துங்கள்', என சிவசேனா கட்சி மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது.

    புதுடெல்லி:

    உ.பி. மாநிலத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ரெயில் விபத்தில் 20க்கும் மேலானோர் பலியாகினர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கழித்து உ.பி. மாநிலத்தின் ஆவுரியாவில் மீண்டும் ரெயில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ரெயில்வே துறை மந்திரி பதவிவிலக முன்வந்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதையடுத்து, இந்த சம்பவங்கள் குறித்து சிவசேனா கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிடப்பட்ட தலையங்க செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நமது நாட்டில் தினமும் ரெயில் விபத்துகள் நடக்கிறது. இந்த விபத்துகளில் பல மக்கள் மரணமடைகின்றனர். ஆனால் மத்திய அரசு ஜப்பான் அரசுடன் இணைந்து புல்லட் ரெயில்கள் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

    புல்லட் ரெயில் கனவுகள் நன்றாக இருக்கிறது, முதலில் இருக்கும் ரெயில்களை பாதுகாப்பாக செயல்படுத்துங்கள். தூய்மையான நடைமேடை, கழிவறை முதலியவற்றை கொடுங்கள். அதோடு ரெயில்வேயால் வழங்கப்படும் உணவுகளில் எலிகளோ, கரப்பான் பூச்சிகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    பிரபு தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய தானாக முன்வந்தாரா? தார்மீக பொறுப்புடன் பிரதம மந்திரி, பிரபுவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லையா?.

    எப்படியாயினும், அறநெறி சம்பந்தமான வார்த்தைகள் இன்று அரசியலில் அவற்றின் அர்த்தத்தை இழந்துவிட்டன. மந்திரிகள் ராஜினாமாவுடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருந்தால், அத்தகைய ராஜினாமா ஒவ்வொரு நாளும் நடந்திருக்கும்.

    அப்படியே மந்திரிகளின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் வேறு பதவியில் அமர்த்தப்படுவர். அந்த இடத்திற்கு வருபவர் மீண்டும் தவறு செய்யத்தான் போகிறார். நாங்களும் தினமும் எங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்போகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் சேவை தொடக்கவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில், இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சிவசேனா கட்சி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×