search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷோபா ஜாண்
    X
    ஷோபா ஜாண்

    கேரளாவில் முதல் முறையாக குண்டர் சட்டத்தில் பெண் கைது

    கொலை, விபசாரம் உள்பட 34 வழக்குகளில் தொடர்புடைய பெண் கேரளாவில் முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பறவாபுழா என்ற இடத்தை சேர்ந்தவர் ஷோபா ஜாண்.

    இவர், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுமியை அவர்களது பெற்றோருக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கினார். அதன் பிறகு அந்த சிறுமியை கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கினார். விபசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டார்.

    இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஷோபா ஜாண், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொச்சி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. ஷோபா ஜாணுக்கு 18 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெயச்சந்திரனுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், மேலும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இதை தொடர்ந்து ஷோபா ஜாண் கொச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஷோபா ஜாண் பெண் தாதாபோல கேரளாவில் செயல்பட்டு உள்ளார். அவருக்கு அடியாட்களாக பல ரவுடிகள் பணியாற்றி உள்ளனர். அவர் மீது கேரளாவில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 34 வழக்குகள் உள்ளன. இதில் 26 வழக்குகளில் ஷோபா ஜாண்தான் முதல் குற்றவாளி.

    பறவாபுழா சிறுமி விபசார வழக்குபோல அவர் மீது கொலை வழக்கு, சபரிமலை தந்திரி மீது பொய்யான பாலியல் புகார் கூறிய வழக்கு, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என்று 34 வழக்குகள் இருப்பதை தொடர்ந்து ஷோபா ஜாணை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கொச்சி போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து ஷோபா ஜாணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    கேரளாவில் குண்டர் சட்டத்தில் முதல் முறையாக கைது செய்யப்பட்ட பெண் ஷோபா ஜாண்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×