search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு விவகாரம்: பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தம்பிதுரை பேட்டி
    X

    நீட் தேர்வு விவகாரம்: பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தம்பிதுரை பேட்டி

    நீட் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
    புதுடெல்லி:

    நீட் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று மாலை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பலமுறை மத்திய அரசை அணுகினார். பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அதனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் நிலைமை மாறிவிட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு தலைவணங்கி செயல்பட வேண்டியது அரசின் கடமை ஆகும்.



    இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் தரவில்லை. இதற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் முயற்சிதான் செய்ய முடியும்.

    நாங்கள் முயற்சி செய்யவில்லை என்று சொல்வது தேவையில்லாத ஒன்று. உதவி செய்வதாக கூறி, பின்னர் ஏன் செய்யவில்லை? என்பதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேளுங்கள்.

    இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முந்தைய தி.மு.க., காங்கிரஸ் அரசுதான் காரணம். முந்தைய அரசு செய்த தவறுகளை சரி செய்ய நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நீட் தொடர்பாக மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசை வலியுறுத்துவோம். பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்போம்.

    நீட் அவசர சட்டம் வரக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடியது காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் நீட் வேண்டாம் என்பார்கள். இங்கு எதிராக வாதாடுவார்கள். தொழில் தர்மம் என்பதற்காக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இப்படி செய்வார்களா?

    மத்திய அரசிடம் இணக்கமாக இருக்கவேண்டும் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதன்படியே செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்பதற்காக மத்திய அரசை குறை சொல்ல விரும்பவில்லை. மத்திய அரசு எங்களை ஏமாற்றவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 
    Next Story
    ×