search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க இணைப்பு பற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு தகவல்
    X

    அ.தி.மு.க இணைப்பு பற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு தகவல்

    முடக்கப்பட்ட கட்சி பெயர், சின்னத்தை மீண்டும் பெறும் நடவடிக்கையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். இதற்காக தேர்தல் கமி‌ஷனில் இரு அணியினரும் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுகிறார்கள்.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சி பெயர், சின்னத்திற்கு இரு அணியினரும் உரிமை கோரியதால் தேர்தல் கமி‌ஷன் அதனை முடக்கி வைத்துள்ளது.

    தற்போது அ.தி.மு.க. அணி ஒன்றாக இணைந்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து கை குலுக்கி முறைப்படி இணைப்பை அறிவித்தனர்.

    இதையடுத்து முடக்கப்பட்ட கட்சி பெயர், சின்னத்தை மீண்டும் பெறும் நடவடிக்கையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இறங்கியுள்ளனர். இதற்காக தேர்தல் கமி‌ஷனில் இரு அணியினரும் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுகிறார்கள். இது தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது.

    இதை ஏற்று தேர்தல் கமி‌ஷன் அ.தி.மு.க. கட்சி பெயர், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்ததை நீக்கி அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

    இரு அணியினரும் தேர்தல் கமி‌ஷனில் தங்களை ஆதரிக்கும் உறுப்பினர்களை பிரமாணப்பத்திரங்களாக தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் இரு அணியினரும் தலா 1 1/2 லட்சம் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். அதை தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து வருகிறது. தற்போது இந்த பத்திரங்கள் வாபஸ் பெறப்படுகிறது.

    இதற்கிடையே சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க கோரியும் தேர்தல் கமி‌ஷனில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்காமல் உள்ளது. இதிலும் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×