search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகுஜன் சமாஜ் டுவிட்டர் போஸ்டரில் அகிலேஷ் படம்: மாயாவதி மறுப்பு
    X

    பகுஜன் சமாஜ் டுவிட்டர் போஸ்டரில் அகிலேஷ் படம்: மாயாவதி மறுப்பு

    டுவிட்டரில் வெளியான போஸ்டரில் அகிலேஷ் யாதவ் புகைப்படம் இடம்பெற்றதில் கட்சிக்கு தொடர்பில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ்  உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் டுவிட்டர் பதிவில் நேற்று ஒரு போஸ்டர் பதிவாகி இருந்தது. அதில், பா.ஜ.க.வை எதிர்க்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு
    விடுப்பது போல் பதிவாகி இருந்தது.

    அந்த போஸ்டரில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மேற்கு வங்காள முதல்-மந்திரி
    மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. இதையறிந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிர்ச்சி அடைந்தார்.



    இதுதொடர்பாக, மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    பகுஜன் சமாஜ் கட்சி பெயரில் பதிவு செய்யப்பட்ட போஸ்டர் உண்மையல்ல. அது எங்களின் அதிகாரப்பூர்வ பதிவு அல்ல.

    அந்த போஸ்டர் முழுவதும் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும், எந்த ஒரு விஷயத்துக்கும் முறையாக பத்திரிகை செய்தி வழியாக கருத்து தெரிவித்து வருகிறது. டுவிட்டரில் எப்போதும் பதிவு செய்வதில்லை.

    மேலும், அந்த போஸ்டரில் எங்கள் கட்சியின் கோஷங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த டுவிட்டர் பதிவு எங்களுடையது இல்லை என்பதற்கு அது ஒன்றே சாட்சியாக இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகள் சார்பில் பாட்னாவில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் மாயாவதி பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×