search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க பெண் போலீஸ் அதிகாரி முதன் முதலாக நியமனம்
    X

    மராட்டியத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க பெண் போலீஸ் அதிகாரி முதன் முதலாக நியமனம்

    மராட்டிய மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பம்ரகாத் போலீஸ் நிலையத்தில் முதன் முதலாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலத்தில் உள்ள காட்ஜிரோலி மாவட்டம் சதீஷ்கார் மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது. இது அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும்.

    இங்கு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அதிரடியாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களையே நியமித்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்குள்ள பம்ராக்கா போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை அதிகாரியாக நியமித்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவரை அதிகாரியாக நியமித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

    பொதுவாக இங்குள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றுவதற்கு போலீசார் தயங்குவது உண்டு. ஆனால் இந்த பெண் அதிகாரி அவரே ஆர்வத்துடன் கேட்டு இங்கு பணிக்கு வந்துள்ளார்.

    அந்த இன்ஸ்பெக்டரின் பெயர் அஞ்சலிராஜ்புத். இவர் 2011-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டு முதலில் அவுரங்காபாத்தில் பணியாற்றினார். அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு நல்ல பெயரையும் பெற்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டரானார்.

    இதைத்தொடர்ந்து காட்ஜிரோலி நகரத்தில் இன்ஸ்பெக்டர் பணி வழங்கப்பட்டது. அங்கும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் சமூக விரோதிகளை ஒடுக்கினார். இந்த நிலையில் மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் எனக்கு பழங்குடி மக்கள் வாழும் புறநகர் பகுதியில் சவால் நிறைந்த இடத்தில் பணி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    எனவேதான் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பம்ரகாத் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமித்துள்ளனர். அவர் பதவி ஏற்று 2 வாரம் ஆகிறது. அதற்குள் அவர் நக்சலைட் பாதித்த பகுதிகளுக்குள் சென்று பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். போலீஸ் செல்ல தயங்கும் உள்பகுதி கிராமங்களுக்குள்ளும் சென்று அந்த பகுதி மக்களை சந்தித்து பேசினார். ஆண்களே செய்ய தயங்கும் பணியை பெண் ஒருவர் ஏற்று செய்வது ஆச்சரித்தை ஏற்படுத்துகிறது.

    இதபோல கடந்த ஆண்டு அஸ்வினி சோனாவாலே என்ற பெண் அதிகாரி ஒருவர் நான் பழங்குடி மக்கள் பகுதியில் சேவையாற்ற விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இதையடுத்து அவரை பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பரம்காத் தாலுகாவில் வட்டார கல்வி அதிகாரியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×