search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதம், நக்சலிசம் ஆகியவற்றில் இருந்து நாம் வெற்றி பெற்று விட்டோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்
    X

    தீவிரவாதம், நக்சலிசம் ஆகியவற்றில் இருந்து நாம் வெற்றி பெற்று விட்டோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

    தேசிய புலனாய்வு முகமையின் நடவடிக்கைகளால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் தேசிய புலனாய்வு முகமையின் புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    கடந்த 3 ஆண்டுகளில் நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தீவிரவாத தாக்குதல்கள் பெருமளவில் குறைந்துள்ளன.
     
    ஜம்மு-காஷ்மீரில் கடமையாற்ற செல்லும் பாதுகாப்பு படையினர்மீது கல்வீசி தாக்கும் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளை அழிப்பது பெரும் சவாலாக இருந்தாலும், நாம் எடுத்த நடவடிக்கைகளால் குற்றங்கள் குறைந்துள்ளன.

    தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம் ஆகியவற்றில் இருந்து நாம் வெற்றி பெற்று விட்டோம். கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாத சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கம் 35 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளன.

    தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது. போலி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கும் நாம் தடையை ஏற்படுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் தேசிய புலனாய்வு முகமையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தீவிரவாதத்துக்கு நிதியுதவி கொடுத்தவர்களின் பட்டியலில் உள்ள பெயர்களை அறியும்போது முதுகுத்தண்டு சில்லிடும் வகையில் இருக்கிறது.  

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேசிய புலனாய்வு முகமையினரும், மாநில போலீஸ் இலாகாவினரும் சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
    Next Story
    ×