search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ அமைச்சகத்தை மோடி தீவிரமாக கையாள வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
    X

    ராணுவ அமைச்சகத்தை மோடி தீவிரமாக கையாள வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

    ராணுவ அமைச்சகத்தை பிரதமர் மோடி தீவிரமாக கையாள வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டின் தற்போதைய சூழலில், ஒருபுறம் சீனாவுடன் போரை நாம் உற்றுப்பார்த்து கொண்டிருக்கிறோம். மற்றொரு புறம், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் நின்றபாடில்லை. இத்தகைய சூழலில், ராணுவ அமைச்சகத்தை பிரதமர் மோடி தீவிரமாக கையாள வேண்டும். நாட்டின் பாதுகாப்புடன் விளையாட கூடாது.

    கோவா முதல்-மந்திரி (மனோகர் பாரிக்கர்) இடைத்தேர்தலை சந்திக்க போகிறார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இடைத்தேர்தலில் தான் தோல்வி அடைந்தால், மீண்டும் ராணுவ அமைச்சகத்தை கையில் எடுப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். ராணுவ அமைச்சகத்தை அற்பமாக கருதினால், நாடு முழுவதும் அராஜகம் நிலவும். மனோகர் பாரிக்கரின் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டல்ல.

    விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அளிக்கும்பட்சத்தில், மராட்டியத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை ஏற்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருதும் அதே வேளையில், ஒரு தோல்வியுறும் முதல்-மந்திரி (மனோகர் பாரிக்கர்) டெல்லி செல்கிறார் என்றால், நாடு முழுவதும் அராஜகம் நிலவும்.

    பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் அனைவரது பெயரையும் மாநில அரசு வெளியிட வேண்டும். அரசு ஆர்வமிகுதியில், மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகப்படியான விவசாயிகளின் பெயரை வெளியிடலாம். இதுபோன்று நடக்காத வகையில், பயனாளிகளின் பெயர் பட்டியலை சட்டசபையில் வெளியிட வேண்டும்.

    ஒவ்வொரு பயனாளிகளின் வீடுகளுக்கும் சிவசேனா தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக சென்று, அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்று சோதனை நடத்துவார்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
    Next Story
    ×