search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: மாநில முதல்-மந்திரிகளுக்கு அருண்ஜெட்லி கடிதம்
    X

    பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: மாநில முதல்-மந்திரிகளுக்கு அருண்ஜெட்லி கடிதம்

    பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில முதல்-மந்திரிகளுக்கு நிதி மந்திரி அருண்ஜெட்லி கடிதம் எழுதி உள்ளார்.
    புதுடெல்லி:

    சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, அதாவது கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் 10-க்கும் மேலான வரிகளை விதித்து வந்தன. இறுதியில் மதிப்பு கூட்டு வரி என்னும் ‘வாட்’ வரியும் விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு பெட்ரோலிய பொருட்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. என்றபோதிலும் பல மாநிலங்களில் இவற்றின் மீது விதிக்கும் வாட் வரியை குறைக்கவில்லை.

    ஒரு சில மாநிலங்கள் மட்டும் இயற்கை எரிவாயு மற்றும் டீசல் மீதான வாட் வரியை சற்று குறைத்தன. அதேநேரம் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 17 சதவீதம் முதல் 31 சதவீதமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி, மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுபற்றி நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியாவது:-

    பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்கள் மீது வாட் வரி அதிக அளவில் விதிக்கப்படுவதால் இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இதர பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சகத்திடம் கவலை தெரிவித்தன. இதைத்தொடர்ந்து நிதி மந்திரி அருண்ஜெட்லி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

    அதில், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் ஒரே சீரான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகமான வாட் வரி, அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மற்ற பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக வாட் வரியை குறைக்கவேண்டும் என நிதி மந்திரி கேட்டுக் கொண்டு உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×