search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசம் - பீகார் வெள்ளத்தில் மிதக்கிறது: 2 கோடி மக்கள் தவிப்பு
    X

    உத்தரபிரதேசம் - பீகார் வெள்ளத்தில் மிதக்கிறது: 2 கோடி மக்கள் தவிப்பு

    உத்தரபிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநில வெள்ளங்களில் 2 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    லக்னோ:

    வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மிக பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதில், உத்தரபிரதேசம், பீகார், அசாம் மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் 28 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதில், 1263 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 996 கிராமங்கள் மற்ற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. 300 வீடுகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது.

    ராப்தி ஆற்றில் வந்த வெள்ளத்தால் அந்த ஆற்றின் ஓரம் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    சுமார் 40 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 612 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழைக்கு இதுவரை இந்த மாநிலத்தில் 33 பேர் பலியாகி உள்ளனர்.

    பீகாரிலும் இதே போன்று வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. அங்கு 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 93 லட்சம் பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி இருக்கிறார்கள்.

    2 லட்சத்து 74 ஆயிரம் பேர் வெள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள்.

    பீகாரில் கிருஷ்ணா கஞ்ச், அரேரியா, கதிகார், மேற்கு சாம்பரன், மொசா பர்பூர், குர்னியா ஆகிய மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    வெள்ளத்துக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாவு எண்ணிக்கை 100-ஐ தாண்டி இருக்கும் என்று மற்ற தகவல்கள் கூறுகின்றன.

    வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலம் மோசமாக பாதக்கப்பட்டு இருக்கிறது. 24 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    கடந்த 10-ந் தேதிக்கு பிறகு இது வரை 49 பேர் பலியாகி உள்ளனர். 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருந்த 46 ஆயிரத்து 479 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அசாமின் முக்கிய நதி யான பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. இதனால் கரையோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    உத்தரபிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநில வெள்ளங்களில் 2 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    Next Story
    ×