search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ராணுவப்படைக்கு 6 அதிநவீன ஹெலிகாப்டர்கள் கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
    X

    இந்திய ராணுவப்படைக்கு 6 அதிநவீன ஹெலிகாப்டர்கள் கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

    இந்திய ராணுவப்படைக்கு ரூ.4,168 கோடியில் 6 அதிநவீன ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடியில் 22 அதிநவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், 15 கனரக சினூக் ஹெலிகாப்டர்களும் கொள்முதல் செய்ய அமெரிக்க அரசுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 11 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ராணுவப்படை கேட்டுக்கொண்டது.

    ஆனால் இதற்கு விமானப்படை சம்மதம் தெரிவிக்கவில்லை. எனினும் எல்லைப்பகுதியில் எதிரிகள் தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்குவதற்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் வேண்டும் என ராணுவப்படை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.



    இந்நிலையில் ராணுவ அமைச்சகத்தின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ராணுவ மந்திரி அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராணுவப்படைக்கு 6 அதிநவீன ஏ.எச்.64-இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ரூ.4 ஆயிரத்து 168 கோடியில் அமெரிக்க அரசிடம் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மேலும் ரஷியாவிடம் இருந்து 2 கப்பல்களுக்கு தேவையான 2 கியாஸ் டர்பைன் என்ஜின்களை ரூ.490 கோடியில் கொள்ளமுதல் செய்யவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகையில், எங்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது. இந்த அதிநவீன ஆயுத வசதிகளுடன் கூடிய இந்த ஹெலிகாப்டர்கள் இரவு நேரத்திலும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது எல்லைப்பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் இது போன்ற ஹெலிகாப்டர்கள் ராணுவப்படைக்கு மிகவும் அவசியம். ராணுவப்படையில் தற்போது தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட ஹெலிகாப்டர்கள் இல்லை. இந்த ஹெலிகாப்டர்கள் 2020-ம் ஆண்டு ராணுவப்படையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முதன் முறையாக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ராணுவப்படையில் இணைய உள்ளது என்றனர்.
    Next Story
    ×