search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் விரும்புவது தூய்மை இந்தியா - நாங்கள் விரும்புவது உண்மையான இந்தியா: ராகுல் பேச்சு
    X

    பிரதமர் விரும்புவது தூய்மை இந்தியா - நாங்கள் விரும்புவது உண்மையான இந்தியா: ராகுல் பேச்சு

    பிரதமர் மோடி விரும்புவது தூய்மை இந்தியா, ஆனால் மக்கள் விரும்புவது உண்மையான இந்தியா என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் டெல்லியில் நடத்திய ’பன்முக கலாசாரத்தை காப்போம்’ என்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர்
    பேசியதாவது:

    மத்திய அரசு ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்து வருகிறது. ஆனால், நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருள்களிலும் ‘மேட் இன் சீனா’ என காணப்படுகிறது.

    பா.ஜ.க. அரசு கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வரப்படும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை. அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக
    கவலைப்படுகிறார். விவசாயிகளை பற்றி கவலைப்படுவதில்லை.



    பிரதமர் மோடி விரும்புவது தூய்மையான இந்தியா. ஆனால் மக்கள் விரும்புவது உண்மையான இந்தியா. பிரதமர் எங்கு சென்றாலும் பொய் சொல்லி வருகிறார்.

    இந்த நாடு என்னுடையது என்று ஒருவர் சொல்கிறார். மற்றொருவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்கிறார். இதுதான் ஆர்.எஸ்.எஸ்-க்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரசின் முக்கிய தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட
    தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×