search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கொடி ஏற்ற மோகன் பகவத்துக்கு தடை விதித்த பெண் கலெக்டர் மாற்றம்
    X

    தேசிய கொடி ஏற்ற மோகன் பகவத்துக்கு தடை விதித்த பெண் கலெக்டர் மாற்றம்

    கேரளாவில் சுதந்திர தினத்தன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கொடி ஏற்றுவதற்கு தடை விதித்த பாலக்காடு பெண் கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி பதவியேற்ற பிறகு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேரள வந்திருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மேலும் சுதந்திரத் தினத்தன்று பாலக்காட்டில் உள்ள கர்ணகியம்மன் பள்ளிக்கூடத்தில் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றினார்.

    முன்னதாக மோகன் பகவத் அந்த பள்ளிக்கூடத்தில் கொடி ஏற்றுவதற்கு பாலக்காடு மாவட்ட கலெக்டர் மேரிகுட்டி தடை விதித்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மக்கள் பிரதநிதிகள் மட்டும்தான் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

    ஆனால் தடையை மீறி மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மேரிகுட்டி உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாலக்காடு மாவட்ட கலெக்டர் மேரிகுட்டி திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சுரேஷ்பாபு பாலக்காடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மோகன் பகவத்துக்கு தடை விதித்ததன் எதிரொலியாகத்தான் பாலக்காடு கலெக்டர் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் பாலக்காடு மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான் என்று கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது. பாலக்காடு கலெக்டர் மட்டுமல்ல திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்ட கலெக்டர்களும் நிர்வாக வசதிக்காக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×