search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை வாலிபர் முருகனின் மனைவி- 2 மகன்கள் கேரள முதல்-மந்திரியை சந்தித்தபோது எடுத்த படம்
    X
    நெல்லை வாலிபர் முருகனின் மனைவி- 2 மகன்கள் கேரள முதல்-மந்திரியை சந்தித்தபோது எடுத்த படம்

    நெல்லை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: கேரள மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

    கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் உயிரிழந்த நெல்லை வாலிபரின் குடும்பத்துக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரைகுடியிருப்பை சேர்ந்த முருகன் (வயது 30) என்ற வாலிபர் கேரளாவின் கோட்டயத்தில் தங்கியிருந்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6-ந் தேதி கொல்லம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது முருகன் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.



    முருகன்

    ஆனால் எந்த மருத்துவமனையும் முருகனுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் இத்தகைய அலட்சியத்தால் சுமார் 7 மணி நேரம் போராடி முருகன் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சம்பவத்தால் பெரும் கவலையடைந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநில சட்டசபையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இது போன்ற சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

    முருகனின் மரணத்தால் அவரது குடும்பம் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளது. குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமான முருகனை இழந்து வாடும் அவரது குடும்பம் தற்போது ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. 2-ம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி. படித்து வரும் அவரது 2 மகன்களின் கல்விக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு முருகனின் மனைவி முருகம்மாள் நேற்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது தங்கள் குடும்பத்துக்கு உதவி கேட்டு மனு ஒன்றையும் அவரிடம் வழங்கினார். இதைக்கேட்டுக்கொண்ட பினராயி விஜயன், முருகனின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

    இது குறித்து பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், ‘முருகனின் உறவினர்கள் இன்று (நேற்று) காலையில் சட்டசபை வளாகத்தில் என்னை சந்தித்தனர். அந்த குடும்பத்தின் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். இது போன்ற கடினமான அனுபவங்கள் யாருக்கும் ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே முதல்-மந்திரியை சந்தித்து விட்டு வெளியே வந்த முருகம்மாள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘எங்களின் தினசரி தேவைகளை நிறைவேற்ற நிரந்தர வருமானம் எதுவும் இல்லை. மற்றவர்களின் உதவி இல்லாமல் 2 குழந்தைகளின் படிப்பையும் தொடர முடியாது. எனவே எங்கள் குடும்பத்துக்கும், குழந்தைகளின் படிப்புக்கும் உதவுமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்’ என்றார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் தமிழக வாலிபர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகை முருகனின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×