search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி
    X

    திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி

    உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகளை தம்பதி பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோராக்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 63 குழந்தைகள் உயிர் இழந்தனர். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஒன்றாக திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை குழந்தைகளை ஒரு தம்பதி பறிகொடுத்த நிகழ்வும் நடந்துள்ளது.

    கோராக்பூர் மாவட்டம் பககாதா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரமதேவ் யாதவ். இவருடைய மனைவி சுமன். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தது.

    திருமணமாகி 8 ஆண்டுகள் கழிந்த நிலையில் சுமன் கர்ப்பம் ஆனார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்ந்தது. மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவருக்கு கடந்த 3-ந்தேதி இரட்டை குழந்தை பிறந்தது.

    ஆனால், இரு குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டு மூச்சு திணறல் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 9-ந்தேதி இரு குழந்தைகளுமே இறந்து விட்டன.

    அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதால் இறந்தனர். ஆனால், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் குழந்தைகளுக்கு மூளைவீக்க நோய் ஏற்பட்டு இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அந்த குழந்தைகளின் பாட்டி அனராதேவி கூறியதாவது:-

    திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தைகள் பிறந்ததால் மிகவும் சந்தோ‌ஷமாக இருந்தோம். குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

    குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எனது பேரக்குழந்தைகள் கடைசி வரை வீட்டுக்கு வரவே இல்லை. இறந்து விட்டதாக சான்றிதழ் மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

    குழந்தைகள் எப்படி இறந்தன என்பது பற்றி கூட எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது தான் ஆக்சிஜன் இல்லாமல் இதே போல் பல குழந்தைகள் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். எங்களுக்கு படிப்பறிவு கிடையாது. எனவே, இதுபற்றிய மேல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ்யாதவ் கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்துக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை.

    அகிலேஷ் யாதவ் இந்த கிராமத்துக்கு வருகிறார் என்ற செய்தி வெளியான பிறகுதான் இரட்டை குழந்தைகள் இறந்த வி‌ஷயமே வெளியே தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×