search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்தத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம்: மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் கெடு
    X

    வேலை நிறுத்தத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம்: மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் கெடு

    வேலை நிறுத்தத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மாநிலங்கள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    வேலை நிறுத்தத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத மாநிலங்கள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கேரளாவை சேர்ந்த வக்கீல் கோசி ஜாக்கப் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், “வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டங்களின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளை அரசியல் கட்சிகளும், பிறரும் சேதப்படுத்துவதை தடுக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பிறப்பித்த வழிகாட்டும் விதி முறைகளை எந்த மாநிலமும் பின்பற்றவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியே போராட்டத்தின்போது சேதம் விளைவிப்பதில் ஈடுபட்டால் அதை கண்டுகொள்ளாத நிலைதான் காணப்படுகிறது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் எப்.எஸ்.நாரிமன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட 2 குழுக்களின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறி இருந்தார்.

    இந்த மனு கடந்த மாதம் 7-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மாநில அரசுகள் இதுபற்றி பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

    இந்த மனு அதே நீதிபதிகள் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:-

    2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் பல மாநிலங்கள் தங்களது பதிலை தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கு விசாரணையின்போது, இந்த மாநிலங்கள் மனுதாரரின் மனுவை எதிர்க்க விரும்பவில்லை என்றே கருத்தில் கொள்ளப்படும்.

    எனவே அடுத்த 4 வாரங்களுக்குள் இதுபற்றிய பிரமாண பத்திரங்களை மாநில அரசுகள் தாக்கல் செய்யவேண்டும். இனிமேலும் அவகாசம் வழங்க இயலாது. பதில் மனுவை தாக்கல் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இதில் உள்ள உரிமை முடிவுக்கு வந்துவிடும். அவை பதில் அளிக்காத நிலையிலேயே மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×