search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரியின் கோரிக்கையை ஏற்று கூர்க்காலாந்து அமைப்பின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
    X

    உள்துறை மந்திரியின் கோரிக்கையை ஏற்று கூர்க்காலாந்து அமைப்பின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

    மேற்கு வங்காளத்தில் கூர்க்காலாந்து தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கூர்க்காலாந்து ஜனமுக்தி மோச்சா வாபஸ் பெற்றுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியை பிரித்து கூர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக் கோரி அந்த பகுதியில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் கடந்த 60 நாள்களாக நடந்து வருகிறது. இதற்கிடையே, ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் இளைஞரணி சார்பில், ஜூலை 21ஆம் தேதி முதல் 12 பேர் கடந்த 25 நாள்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் நடந்து வரும் பல்வேறு போராட்டங்களால் பள்ளி, கல்லூரிகள், கடைகள், உணவு விடுதிகள் போன்றவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில்  வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    இந்நிலையில், உள்துறை மந்திரியின் வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் தலைவர் பிமல் குருங் கூறுகையில், “உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம்.

    நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன் பேரில் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக இளைஞரணியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூர்க்காலாந்து கிடைப்பதற்கான எங்களின் முயற்சியில் கிடைத்த முதல் வெற்றி இது” என தெரிவித்துள்ளார்.

    உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் முழு அடைப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×