search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ் டெல்லி புறப்பட்டார்
    X

    பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ் டெல்லி புறப்பட்டார்

    பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
    மும்பை:

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக பிளவுபட்டுள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு டி.டி.வி. தினகரன் தரப்பினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மேலும், தேர்தல் கமி‌ஷன் அ.தி.மு.க. சின்னம், கொடியை முடக்கி வைத்துள்ளதால் கட்சி யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. அணிகளை இணைப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா, தினகரனை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என நிபந்தனைகள் விதித்தனர். இதில் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. அணிகளை இணைப்பதில் பா.ஜனதா தலையீடு உள்ளதாகவும், பிரதமர் மோடியே இரு அணி தலைவர்களையும் சந்தித்து சமரச முயற்சிகளை மேற்கொள்வார் என்ற தகவலும் வெளியானது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி செல்லும்போது பிரதமர் மோடியை சந்தித்து வந்தாலும், இணைப்புக்கான முயற்சி நடக்கவில்லை. வரும் 15-ஆம் தேதிக்குள் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராக இருந்தாலும், அணிகள் இணைப்பு முயற்சிக்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.



    இதனால் ஓ.பன்னீர்செல்வம் மீது அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

    இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று மும்பை சென்றார். அங்கிருந்து ஷீரடி சென்று சாய்பாபா கோவிலிலும், சனிபகவான் கோவிலிலும் சாமி கும்பிட்டார்.

    பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் நாளை சந்தித்துப் பேசுகிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
     
    டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
    Next Story
    ×