search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரின் சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
    X

    காஷ்மீரின் சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

    காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், தீவிரவாதிகளின் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

    சோபியன் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் உள்ள அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

    இந்நிலையில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதேபோல், பந்திபோரா பகுதியில் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    முன்னதாக, கே.ஜி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று மாலை இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் ஜக்ரம் சிங் தோமர் (42) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


    Next Story
    ×