search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
    X

    டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

    டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் சந்தித்து மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இன்று 27-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

    ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகள் தினமும் ஒரு நூதன முறையை கையாண்டு அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். கை, கால்களை சங்கிலியால் பிணைத்தல், தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொள்ளுதல், உடலில் சேறு பூசுதல் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று தீப்பந்தம் ஏற்றி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    கடந்த வாரம் தி.மு.க. எம்.பி. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தமிழக விவசாயிகளை டெல்லியில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இந்தநிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

    அவரை இன்று காலை அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற பிரதமரிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தோம். அவர் எங்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக் கொண்டார். அரியலூர் மாவட்டம் மருதையாற்றில் இருந்து கரைவெட்டி சரணாலயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வழி ஏற்படுத்தி தரவும், விருதுநகர் மாவட்டம் குண்டாறு பகுதியில் தடுப்பணை கட்டி திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தரவும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.



    அதேபோல் விரைவில் எங்கள் கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிக்கும் வகையில் அவரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து தரவும் உறுதியளித்தார். இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து சோனியா காந்தியிடம் கூறி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த நாராயணசாமி, திருச்சியை சேர்ந்த பெரிய சாமி ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 2 நாட்களாக நடத்தி வருகிறார்கள்.

    டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் சந்தித்து மனு அளித்தனர்.

    Next Story
    ×