search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

    டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 26-வது நாளாக நடைபெற்றது.
    புதுடெல்லி:

    கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 26-வது நாளாக நடைபெற்றது.

    தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நேற்று தீப்பந்தம் ஏந்தி ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்று கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தபோது, எங்களது நிலைமையை பார்த்து அவர் கண் கலங்கினார்.

    இதைப்போல பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் அ.தி.மு.க. எம்.பி.க்களிடமும் கையெழுத்து பெற்றோம். மேலும், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. டி.ராஜா ஆகியோரையும் சந்தித்தோம்.

    பிரதமர் மோடி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அப்படி இல்லாவிட்டால் இங்கேயே உண்ணாவிரதம் இருந்து சாக வேண்டியதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×