search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள வன பகுதியில் காட்டெருமை தாக்கி சுற்றுலா வழிகாட்டி பலி
    X

    கேரள வன பகுதியில் காட்டெருமை தாக்கி சுற்றுலா வழிகாட்டி பலி

    கேரள வனப் பகுதியில் காட்டு எருமை தாக்கியதில் சுற்றுலா வழிகாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள விதுரா சுற்றுலா தலமாக திகழ்கிறது. அடர்ந்த வனப் பகுதிகள் நிறைந்த இங்கு யானைகள், காட்டு எருமைகள் உள்பட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவு வருகை தருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக காட்டு பகுதிக்கு அழைத்துச் செல்ல சுற்றுலா வழிகாட்டிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் இங்கு சுற்றிப் பார்க்க வருகை தந்தனர். அவர்களை காட்டாக்கடையைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 58) என்ற வழிகாட்டி காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    அங்குள்ள இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் ரசித்துக் கொண்டிருந்த போது ஒரு பெரிய காட்டு எருமை அங்கு வந்தது. இதைப்பார்த்ததும் தமிழக சுற்றுலா பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சுற்றுலா வழிகாட்டி ராஜேந்திரனும் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை காட்டு எருமை கொம்பால் முட்டி தூக்கி வீசியது.

    சிறிது நேர அட்டகாசத்திற்கு பிறகு அந்த காட்டு எருமை அங்கிருந்து சென்றது, அதன் பிறகு சுற்றுலா பயணிகள் அங்குச் சென்று பார்த்தபோது ராஜேந்திரன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு விதுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுற்றுலா பயணிகளையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் கேரள வனத்துறை மந்திரி ராஜு விதுரா ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு அரசின் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார்.
    Next Story
    ×