search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பிதுரை தமிழில் பேசியதற்கு இந்தி பேசும் எம்.பி.க்கள் எதிர்ப்பு
    X

    தம்பிதுரை தமிழில் பேசியதற்கு இந்தி பேசும் எம்.பி.க்கள் எதிர்ப்பு

    பாராளுமன்றத்தில் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு இந்தி மொழி பேசும் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
    புதுடெல்லி:

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார்.

    தனது பேச்சை அவர் தமிழில் தொடங்கினார். இதற்கு இந்தி மொழி பேசும் மாநில எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் அமளி நிலவியது. இதையடுத்து தம்பிதுரை, “நீங்கள் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசினால் அதை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் தமிழில் பேசக் கூடாதா?” என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

    அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நீங்கள் தமிழில் பேசுவதாக முன்பே எனக்கு நோட்டீஸ் கொடுத்து இருந்தால் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்றார். இதைத் தொடர்ந்து தம்பிதுரை ஆங்கிலத்தில் பேசினார்.

    அவர் பேசும்போது கூறியதாவது:-

    நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்து மொழி பேசும் மக்களும் போராடினர். எனவே எந்தவொரு மொழிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து மொழிகளுக்கும் பாராளுமன்றம் சமத்துவம் அளிக்கவேண்டும்.

    நமது நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என அழைக்கப்படவேண்டும். பிராந்திய மொழிகள் என்று அவற்றை கூறக்கூடாது. தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகள் அனைத்தும் நாட்டின் அலுவல்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

    அ.தி.மு.க.வின் நிறுவனரும், மறைந்த தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர்., மகாத்மா காந்தியின் கொள்கைகளில் மிகுந்த பற்று கொண்டவர். திருமணத்திற்காக தனது தாயாரிடம், ‘கதராடை அணிய அனுமதித்தால் மட்டுமே நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று உறுதியாக கூறினார். இதை அவருடைய தாயார் ஏற்கவில்லை. என்றபோதிலும் எம்.ஜி.ஆரின் விருப்பம்தான் இதில் நிறைவேறியது.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×