search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
    X

    தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

    காவிரி நீர் தொடர்பான வழக்கில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன.

    இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் தரப்பிலான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பிலான இறுதி வாதம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. 3-வது நாளாக நேற்று தமிழக அரசு தரப்பு வாதம் தொடர்ந்தது.

    தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

    சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் முன்பு இருபோகம் சாகுபடி நடைபெறும். தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்ய முடிகிறது. காவிரி நடுவர் மன்றம், தமிழ்நாட்டில் பயிர் சாகுபடியாகும் நிலப்பரப்பின் அளவை குறைத்து மதிப்பிட்டது. அதே நேரத்தில் கர்நாடகத்தின் எதிர்கால தேவைக்கும் தண்ணீரை ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளது.

    தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் நிலத்தடி நீரை முழுமையாக பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்தினால் அது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக அமையும்.

    அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதி தீபக் மிஸ்ரா குறுக்கிட்டு, “நிலத்தடி நீர் என்பது தற்காலிகமானதுதான். அதை அவசரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். முழுமையாக பயன்படுத்த முடியாது. எனவே, தண்ணீர் பற்றிய கணக்கெடுப்பின் போது நிலத்தடி நீரை தவிர்த்து விட்டுத்தான் கணக்கெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

    தொடர்ந்து வாதாடிய சேகர் நாப்டே, தமிழ்நாடு கடல் பகுதியில் அமைந்துள்ளதால் பெரும்பாலான நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டது என்றும், எனவே நிலத்தடி நீரின் பயன்பாடு அதிக பலனை தராது என்றும் கூறி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை, சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பு, நிலத்தடி நீரின் அளவு, பாசனத்துக்கு தேவைப்படும் நதிநீரின் அளவு ஆகியவை குறித்த விவரமான அறிக்கை ஒன்றை வாசித்தார்.

    அப்போது கர்நாடக தரப்பு மூத்த வக்கீல் பாலி நாரிமன் குறுக்கிட்டு, “தற்போது இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில்தான் தமிழக அரசு வாதங்களை முன்வைக்க வேண்டும். தற்போது தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் புள்ளிவிவரங்கள் பற்றி விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு என்ன புள்ளிவிவரங்கள் வைக்கப்பட்டதோ அதன் அடிப்படையிலேயே வாதங்களை முன்வைக்க வேண்டும்” என்று கூறி ஆட்சேபம் தெரிவித்தார்.

    அதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, “மக்கள் தொகை அதிகரிப்பு என்பது முக்கியமான அம்சம்தானே” என்று கூறினார்.

    அதற்கு பாலி நாரிமன், “மக்கள் தொகை பற்றிய கணக்கை தருவது குறித்து எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் 2014-ம் ஆண்டின், அதாவது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு பிந்தைய காலகட்டத்தில் உள்ள நிலத்தடி நீர் தொடர்பான புள்ளிவிவரங்களை தங்கள் வாதத்தின் போது தெரிவிப்பது தவறானது. இதனைத்தான் ஆட்சேபிக்கிறோம்” என்று கூறினார்.

    அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய சேகர் நாப்டே, “நான் முன்வைத்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசாங்க நிறுவனங்கள் வெளியிட்டவை. அரசாங்க ஆவணத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இதனை நானோ தமிழக அரசோ தயாரிக்கவில்லை. இந்த ஆவணங்களில் தொகுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களை கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்” என்றார்.

    உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் கர்நாடகம் மற்றும் கேரளா தரப்பிலும் அந்த மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்நாடகத்தின் நிலத்தடி நீர் அளவு பற்றி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

    அதன்பிறகு சேகர் நாப்டே தொடர்ந்து வாதாடுகையில், “தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதன் அடிப்படையில் மட்டுமே சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு கணக்கிடப்பட வேண்டும். அதற்கு ஏற்ற தண்ணீர் பெறுவது மாநிலத்தின் அடிப்படை உரிமை ஆகும். கர்நாடகத்தில் தண்ணீர் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. வேளாண்மை நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் அந்த மாநிலத்தின் மண் நெற்பயிரை விளைவிக்க முடியாத தன்மை கொண்டது. ஆனால் கர்நாடகம் பிடிவாதமாக நெற்பயிரை விளைவிக்க முயன்று தண்ணீரை பெருமளவில் வீணடிக்கிறது. அந்த மாநில மண்ணின் தன்மைக்கு ஏற்ப அங்கு சோளம், ராகி போன்ற பயிர்கள் செழித்து வளரும்” என்றார்.

    உடனே குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? கர்நாடக மக்கள் அரிசி சாப்பிடக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?” என்று கேட்டார்.

    அதற்கு நாப்டே, நெற்பயிருக்காக கர்நாடகம் பயன்படுத்தும் 6 டி.எம்.சி. தண்ணீரை கொண்டு தமிழ்நாட்டில் அதிக அளவில் நெற்பயிர் செய்யலாம் என்றும், அவர்கள் தண்ணீரை வீணடிப்பதை விட தமிழ்நாட்டிடம் இருந்து நெல்லை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

    தமிழகத்துக்கு சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்படும் என்றும், கர்நாடகத்தின் கருணையால்தான் குறுவை சாகுபடி சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    உடனே நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழ்நாட்டில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீங்கள் மேட்டூர் அணையை தவிர வேறு அணை எதுவும் கட்டிக்கொள்ள முடியாதா?” என்று கேள்விகள் எழுப்பினார்.

    அதற்கு சேகர் நாப்டே, கர்நாடகம் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அதிக அளவில் தண்ணீரை எளிதாக சேமித்து வைக்க முடியும் என்றும், தமிழ்நாடு சமதளத்தில் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்றும் கூறினார்.

    என்றாலும், “தமிழ்நாட்டில் தண்ணீரை தேக்கி வைக்க வேறு வழியை நீங்கள் முயற்சிக்கவில்லையா?” என்று நீதிபதி கேட்டார்.

    அதற்கு சேகர் நாப்டே, “ஏற்கனவே கூறியது போல தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தட்டையானது என்பதால் தண்ணீரை நிறுத்தி தேக்கி வைப்பது கடினம் என்றும், மேட்டூரில் அளவுடன்தான் தேக்கி வைக்கமுடியும் என்றும், தமிழ்நாட்டுக்கு பாதகமாக அமைந்த இந்த அம்சத்தை காவிரி நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தார்.

    அப்போது பாலி நாரிமன் குறுக்கிட்டு, “மேகதாது தமிழ்நாட்டின் எல்லையில்தான் உள்ளது. அங்கு ஒரு அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறினார்.

    அதற்கு தமிழக அரசு வக்கீல் ஜி.உமாபதி, “மேகதாது நீர்மின்சார திட்டத்தின் வரைவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அதனால்தான் தமிழ்நாடு ஆட்சேபம் தெரிவிக்கிறது” என்றார்.

    அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதிகள், “இந்த வழக்கில் நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்தும் வகையில் ஒழுங்காற்று அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவோம். இல்லையென்றால் நீங்கள் இரு மாநிலங்களும் நீர்ப்பங்கீட்டுக்காக சண்டையிட்டுக்கொண்டே இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

    அத்துடன், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த பிறகு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் தலா ஒரு நிபுணரை நியமித்து அவர்கள் மூலம் தங்கள் தரப்பிலான தொழில்நுட்ப விவரங்களை விவரமாக கோர்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. 
    Next Story
    ×