search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் நாளை முதல் பீகாரில் சுற்றுப்பயணம்
    X

    ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் நாளை முதல் பீகாரில் சுற்றுப்பயணம்

    ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், நாளை முதல் பீகாரில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பாட்னா:

    பீகாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கும் விதமாக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, நிதிஷ்குமார் முதல் மந்திரியாகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

    இதற்கிடையே, லாலு பிரசாத் மற்றும் அவரது மகள், மகன் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதைதொடர்ந்து, ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீரென ராஜினாமா செய்தார்.



    அதையடுத்து, பா.ஜனதாவின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றி, மீண்டும் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில்குமார் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் நிதிஷ்குமார் வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க.வுடன் நிதிஷ்குமார் கைகோர்த்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறியிருந்தார்.

    இந்நிலையில், 3 நாள் சுற்றுப்பயணமாக சரத் யாதவ் நாளை பீகார் செல்கிறார். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் நரேன்சிங் கூறுகையில், சரத் யாதவின் சுற்றுப்பயணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அவர் சொந்த விஷயம் காரணமாகவே பீகாருக்கு வருகிறார் என தெரிவித்துள்ளார்.

    பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் நிதிஷ்குமார் ஆட்சி நடத்தி வரும் நிலையில், சரத் யாதவ் அங்கு சுற்றுப்பயணம் செய்வது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×