search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெவ்வேறு அளவுகளில் ரூபாய் நோட்டுகள்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி - நாளை வரை ஒத்திவைப்பு
    X

    வெவ்வேறு அளவுகளில் ரூபாய் நோட்டுகள்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி - நாளை வரை ஒத்திவைப்பு

    புதிதாக அச்சடிக்கப்பட்ட 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் வெளியாகியுள்ளது குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது மற்றும் தற்போது, இரண்டு வெவ்வேறு அளவிலான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படுவதாக ராஜ்யசபாவின் இன்றைய பூஜ்ஜிய நேரத்தின் போது காங்கிரஸ், திரிணாமுல், ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வியெழுப்பின. இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.

    குறிப்பாக, வேறு அளவுகளிலான புதிய 500 ரூபாய் நோட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எம்.பிக்கள் அவையில் எடுத்துக்காட்டினர். ”ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்துடன் வெளியாகும் ரூபாய் நோட்டுகள் ஏன் மாறுபட்ட அளவுகளை கொண்டுள்ளன?” என சரத் யாதவ் கேள்வியெழுப்பினார்.

    கடும் கூச்சல்களுக்கு இடையே பேசிய, மத்திய மந்திரி அருண் ஜெட்லி, “அற்ப காரணங்களுக்காக பூஜ்ஜிய நேரம் வீணாக்கப்படுகிறது. உரிய முறையில் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தால் இது தொடர்பாக பேசலாம்” என கூறினார்.
    ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக தங்களது குரல்களை எழுப்பியபடியே இருந்தனர்.

    இதனால், அவையில் கூச்சல், குழப்பம் வெகுநேரம் நீடித்தது. எம்.பி.க்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் சபாநாயகர் முதலில் அவையை 6 முறை ஒத்திவைத்து, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
    Next Story
    ×