search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்தார் சரோவர் அணை விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மேத்தா பட்கர் மருத்துவமனையில் அனுமதி
    X

    சர்தார் சரோவர் அணை விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மேத்தா பட்கர் மருத்துவமனையில் அனுமதி

    மத்தியப் பிரதேசத்தில் சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 12 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    போபால்:

    குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1961-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த அணை நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது மத்திய பிரதேச மாநில எல்லையில் உள்ளது. சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்திய பிரதேசத்தை ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தனர்.

    அடிக்கல் நாட்டிய போது, ’’இந்த அணைத் திட்டத்துக்காக வீடுகளோடு சேர்த்து நிலங்களை அளித்த ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முழுமையான வாழ்வாதார இழப்பீடு அளித்து நியாயம் வழங்க வேண்டும்’’ என்று நேரு கூறி இருந்தார்.

    ஆனால், அணைக்கான மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலமும் இதர சொத்துக்களும் ‘நீர்ப்பாசனத் திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள்’ என்று இன்றுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால், அணைக்காக வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



    சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

    இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 12 நாட்களாக நீடித்ததால் மேத்தா பட்கர் உடல்நிலை மோசம் அடைந்தது.

    இதனையடுத்து மேத்தா பட்கர் மற்றும் அவருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


    நிலைமை எல்லை மீறி போனதால், சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக ரூ.900 கோடி நிதியுதவி அளிப்பதாக முதல்வர் சவுகான் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×