search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்: பெங்களூரு சிறையில் இன்று சட்டசபை பொது கணக்குகுழு ஆய்வு
    X

    சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்: பெங்களூரு சிறையில் இன்று சட்டசபை பொது கணக்குகுழு ஆய்வு

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது குறித்து கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுப்பதற்கு சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.



    இதுதவிர முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தெல்கி மற்றும் சில கைதிகளுக்கு உணவு பொருட்கள், மருந்து, மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறி இருந்தார்.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் பெங்களூரு மாநகர குற்றப் பிரிவு கூடுதல் கமி‌ஷனர் ரவி, மைசூரு சிறை சூப்பிரண்டு ஆனந்த்ரெட்டி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்கள் விசாரணையை முடித்துவிட்டனர். இன்னும் ஒருசில நாட்களில் கர்நாடக உள்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை பொது கணக்கு குழு தலைவரும், முன்னாள் பா.ஜனதா துணை முதல்-மந்திரியுமான அசோக் தலைமையில் ஒரு குழுவினர் ஏற்கனவே சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மெகரித் மற்றும் சிறை அதிகாரிகளை அழைத்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டனர். சிறையில் நடந்த விதிமுறை மீறல்களை சரிசெய்து இதுகுறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் பொது கணக்கு குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு பொது கணக்குகுழு தலைவர் அசோக் உத்தரவிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து இன்று அசோக் எம்.எல்.ஏ. தலைமையில் பொது கணக்கு குழுவினர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு செய்கிறார்கள். சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் ஒழுங்காக இயங்குகின்றனவா? கைதிகளுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்கிறார்கள். சிறைத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துகிறார்கள்.

    சசிகலா, தெல்கி உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளையும் பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்கிறார்கள். சிறையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறை உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்றும், சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கெடுபிடியால் தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் சசிகலா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.



    நேற்று முன்தினம் தினகரன் சசிகலாவை சந்தித்தபோது இந்த தகவலை கூறி அவர் கதறி அழுததாக சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பெங்களூரு சிறையில் கைதி தெல்கிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்த வழக்கில் பரப்பன அக்ரஹார சிறை முன்னாள் சூப்பிரண்டு ஜெயசிம்மா, முன்னாள் ஏ.எஸ்.பி. நஞ்சப்பா ஆகியோருக்கு கர்நாடக ஐகோர்ட்டு நேற்று 5 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பால் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்த விவகாரத்தில் சிக்கி உள்ள அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே டி.ஐ.ஜி. ரூபாவும், சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தால் கோர்ட்டு கண்டனம் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தார்.

    கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலா தரப்பினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×