search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
    X

    திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    ரூ.1,553 கோடி செலவில், திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    ரூ.1,553 கோடி செலவில், திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கும் இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேற்கண்ட இரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் 86.56 கி.மீ. ஆகும். இத்திட்டத்துக்கான மதிப்பீட்டு செலவு ரூ.1,431 கோடியே 90 லட்சம் ஆகும். இப்பணி, 4 ஆண்டுகளில், அதாவது 2020-2021-ம் நிதி ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    ஆண்டுதோறும் செலவுத்தொகை 5 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இத்திட்டம் முடிவடையும்போது, ரூ.1,552 கோடியே 94 லட்சம் செலவாகி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பணியால் 20 லட்சத்து 77 ஆயிரம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இரட்டை ரெயில் பாதையால், சரக்கு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயங்கும் வேகம் அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் இந்த வழித்தடத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவையை ஈடுகட்ட உதவும் என்று மத்திய அரசு கருது கிறது.

    திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடம் அருகே துறைமுகங்கள் உள்ளன. அதனால், அதில், பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு ரெயில் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. அத்துடன், விழிஞ்சம் துறைமுகம், 2019-ம் ஆண்டுக்குள் செயல்பட உள்ளது. அதன் 30 சதவீத போக்குவரத்து பணிகளை ரெயில்வேதான் கையாள போகிறது.

    தற்போது, திருவனந்தபுரம்-நாகர்கோவில் வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்து வருவதால், கன்னியாகுமரி மற்றும் சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அந்தவகையில், கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கும், சுமுகமான போக்குவரத்துக்கும் இந்த பாதையின் திறனை தரம் உயர்த்துவது அவசியம். எனவேதான், திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை ரெயில்பாதை திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×