search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டிறைச்சிக்கு தடை - உ.பி. வனவிலங்கு காப்பகங்களில் பசியால் வாடும் சிங்கம், புலிகள்
    X

    மாட்டிறைச்சிக்கு தடை - உ.பி. வனவிலங்கு காப்பகங்களில் பசியால் வாடும் சிங்கம், புலிகள்

    மாடுகளை கொல்லவும் மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வனவிலங்கு காப்பகங்களில் உள்ள சிங்கம், புலிகள் பசியால் வாடுவதாக தெரியவந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாமல் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த இறைச்சிக்காக ஆடு, மாடுகளை அறுக்கும் கூடங்கள் மற்றும் இறைச்சி விற்பனை மையங்களை மூடுமாறு உத்தரவிட்டார்.

    இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யவும், அறுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வனவிலங்கு காப்பகங்களில் உள்ள சிங்கம், புலிகளுக்கு தினந்தோறும் உணவாக அளிக்கப்படும் மாட்டிறைச்சி கிடைப்பதில் இடர்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக, பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாடு முழுவதும் உள்ள வன விலங்கு காப்பகங்களுக்கு இறைச்சி அனுப்புவது தடைபட்டுள்ளதா? என்ற கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்  பாராளுமன்ற மேல்சபையில் இன்று எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார்.

    அனுமதியற்ற இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதித்ததால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, கான்பூர் வன விலங்கு காப்பகங்களுக்கு மட்டும் இறைச்சி அனுப்புவதில் சற்று இடர்பாடு உள்ளது. நாட்டில் உள்ள இதர வன விலங்கு காப்பகங்களுக்கு வழக்கபோல் இறைச்சி அனுப்பப்பட்டு வருகிறது.  

    லக்னோ, கான்பூர் வன விலங்கு காப்பகங்களில் உள்ள விலங்குகளுக்கு எருமை மாட்டிறைச்சிக்கு பதிலாக ஆட்டிறைச்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று தனது பதிலில் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

    எனினும், பொதுவாக ஆட்டிறைச்சிக்கும் மாட்டிறைச்சிக்கும் உள்ள விலை வித்தியாசத்தின்படியும், விலங்குகளின் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டின்படியும் இதற்கு முன்னர் சராசரியாக தினந்தோறும் பத்து கிலோ மாட்டிறைச்சியை தின்றுவந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு தற்போது மூன்று கிலோ இறைச்சிகூட கிடைக்காது. இதனால், அவை அரை வயிற்றுப் பட்டினியாக கிடக்க வேண்டியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×