search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூர்க்காலாந்து போராட்டத்தில் திடீர் வன்முறை: போலீசார் - போராட்டக்காரர்கள் காயம்
    X

    கூர்க்காலாந்து போராட்டத்தில் திடீர் வன்முறை: போலீசார் - போராட்டக்காரர்கள் காயம்

    கூர்க்காலாந்து தனி மாநிலம் கேட்டு மேற்கு வங்கத்தில் நடந்து வரும் போராட்டத்தில், இன்று திடீரென வன்முறை ஏற்பட்டதால் போலீசாரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியை பிரித்து கூர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக் கோரி அந்த பகுதியில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் நடந்து வரும் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகள், கடைகள், உணவு விடுதிகள் போன்றவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில்  வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் பகுதியில் உள்ள ஜெய்காவ் கிராமத்தில் கூர்க்காலாந்து ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளால் சுட தொடங்கினர். இதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீசார், ராணுவம், துணை ராணுவப்படையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, டார்ஜிலிங்கில் போராட்டம் காரணமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் படிப்பு தடைபட்டு வருகிறது. இதனால் அவர்களுக்கு நடத்த வேண்டிய பாடத்திட்டங்களை முடிப்பதற்காக பள்ளி மாணவர்கள் சிலிகுரி பகுதிக்கு மாற்றப்பட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×