search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் பிரச்சினை: வருகிற 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - சித்தராமையா அறிவிப்பு
    X

    காவிரி நீர் பிரச்சினை: வருகிற 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் - சித்தராமையா அறிவிப்பு

    காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூருவில், வருகிற 5-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
    மைசூரு:

    முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் ராகேஷ். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நேற்று மைசூருவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார்.

    மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்த அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தற்போது அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நாம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்தாக வேண்டும். இது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு ஆகும். அதை நாம் மீறக்கூடாது. அதை மீறினால் நாம் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் நாம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை அணைகளில் இருந்து திறந்து விட்டே ஆக வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மீறக்கூடாது என்பதால்தான் நமக்கு கிடைத்த தண்ணீரில் இருந்து பாதியளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளோம்.

    விவசாயத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வரும் குமாரசாமி 31-ந் தேதி(அதாவது நாளை) விவசாயிகளை ஒன்று திரட்டி பெங்களூருவில் விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

    அவர் அரசியல் லாபத்திற்காக இவ்வாறு செயல்பட்டு வருகிறார். அவர் மட்டுமல்ல யார் என்ன செய்தாலும் இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. ஒரு இடத்தில் திறந்துவிட்டால் மாநிலம் முழுவதும் விவசாயிகள் தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதனால் இந்த ஆண்டு கண்டிப்பாக விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடியாது.

    கர்நாடகத்தில் இந்த ஆண்டு 50 சதவீத மழையே பெய்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் மொத்தம் 9 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் தான் இருக்கிறது. இந்த நீர், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவில்தான் உள்ளது. அதனால் தற்போது அணைகளில் உள்ள நீரைக் கொண்டு மக்களின் குடிநீர் தேவையை மட்டும்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் பின்னர் குடிப்பதற்கு நீர் இருக்காது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். அதனால் மக்களின் குடிநீர் தேவைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்போம். அதன்பிறகு விவசாயத்திற்கான தண்ணீர் தேவை குறித்து முடிவு செய்வோம்.

    தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரசாமி போராட்டம் நடத்தி வருகிறார். அவரும் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர். கோர்ட்டின் உத்தரவை மீறினால் என்னென்ன சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று அவருக்கும் நன்றாக தெரியும்.



    காவிரி நீர் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக வருகிற 5-ந் தேதி(ஆகஸ்டு) பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். இதில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    காவிரி நீர் பிரச்சினையை முடித்து வைக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும். ஆனால் அவர் இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இதுதொடர்பாக முடிவு எடுக்க கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் 17 பேர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

    இது அவர்கள் கர்நாடக மக்கள் மீது கொண்டுள்ள அலட்சிய போக்கை காட்டுகிறது.

    லிங்காயத் மற்றும் வீரசைவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சமூகத்தை தனித்தனி மதங்களாக அறிவிக்க கோரி என்னிடம் மனு கொடுத்துள்ளனர். நான் அவர்களிடம் “ஒற்றுமையாக வாழுங்கள், உங்கள் பிரச்சினையை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என்று அறிவுரை கூறி உள்ளேன்.

    லிங்காயத் மற்றும் வீரசைவா சமூகங்களை தனித்தனி மதங்களாக ஆக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. சமூகத்தையும், சமுதாயத்தையும் உடைப்பது எனது நோக்கமல்ல. அந்த வேலையை நான் செய்ய மாட்டேன். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. பா.ஜனதாவினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

    லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நான் அமைத்துள்ளதாக கூறுகிறார்கள். அது தவறு. எனது உத்தரவின்பேரிலோ, அரசு உத்தரவின்பேரிலோ அந்தக்குழு அமைக்கப்படவில்லை. அந்த சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அவர்களாகவே ஒன்று சேர்ந்து குழு அமைத்து, ஆலோசிக்க சென்றுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி ராகுல்காந்தி தலைமையில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. அந்த கருத்தரங்கில் அம்பேத்கரின் கொள்கைகள் எடுத்துக்கூறப்பட்டன. மேலும் அதில் தீண்டாமை ஒழிப்பு பற்றியும் விரிவாக பேசப்பட்டது. இது சாதி வெறி பிடித்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். தாழ்த்தப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கு காங்கிரஸ் என்றும் பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மந்திரி ஆஞ்சநேயா உடன் இருந்தார்.
    Next Story
    ×