search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் லாலு பிரசாத், குடும்பத்தினர் மீது புதிய வழக்கு
    X

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் லாலு பிரசாத், குடும்பத்தினர் மீது புதிய வழக்கு

    லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பாட்னா:

    லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லாலு பிரசாத், மத்தியில் அமைந்திருந்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரி பதவி வகித்தபோது, பாட்னாவில் முக்கிய இடத்தில் உள்ள ஒரு நிலத்தை சர்லா குப்தா என்பவருக்கு சொந்தமான பினாமி கம்பெனிக்கு லஞ்சமாக பெற்றுத்தந்து, ரெயில்வேக்கு சொந்தமான 2 ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்கள் பராமரிப்பு பணியை வழங்கினார் என்று புகார் எழுந்துள்ளது.

    இதேபோன்று ராஞ்சி, பூரி போன்ற இடங்களில் உள்ள ரெயில்வே ஓட்டல்களின் பராமரிப்பு பணியை வழங்கி, அதற்கு லாலு பிரசாத் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

    இது தொடர்பாக லாலு பிரசாத், தனியார் ஓட்டல் இயக்குனர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார், தற்போது லாரா புராஜக்ட்ஸ் என்று அறியப்படுகிற டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம், ஐ.ஆர்.சி.டி.சி.யின் நிர்வாக இயக்குனராக இருந்த பி.கே. கோயல் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    அதைத் தொடர்ந்து லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளையும் நடத்தியது.

    இந்த நிலையில், லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிய நெருக்கடி வந்துள்ளது. இந்த நெருக்கடி, மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் வழியாக வந்துள்ளது.

    லாலு பிரசாத், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள்மீது மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் இந்த வழக்கை பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிக்கியுள்ளவர்களிடம் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பி விசாரணை செய்யும்.

    சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிற வழக்குகளில், ஊழல் சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×