search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் காலை வெட்டியாவது வெளியில் எடுத்து காப்பாற்றுங்கள்: மும்பை கட்டிட விபத்தில் சிக்கியவரின் கதறல்
    X

    என் காலை வெட்டியாவது வெளியில் எடுத்து காப்பாற்றுங்கள்: மும்பை கட்டிட விபத்தில் சிக்கியவரின் கதறல்

    மராட்டிய மாநிலம் காட்கோபரில் ஏற்பட்ட கட்டிட விபத்தின் இடிபாடுகளில் சிக்கியவர், எனது காலை வெட்டியாவது வெளியில் எடுத்து என்னை காப்பாற்றுங்கள் எனக்கூறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி, இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள நர்சிங் ஹோம் உரிமையாளர் சிவசேனாவை சேர்ந்த சுனில் சிதப்பை கைது செய்தனர். விபத்து நடந்த பகுதிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்று பார்வையிட்டார்.

    கட்டிட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த முதல்-மந்திரி பட்னாவிஸ், அதன்பின்னர், நிதியுதவியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து நேற்றும் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பிரக்யா ஜடேஜா என்பவரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.



    இதுதொடர்பாக மீட்புப் படையினர் கூறுகையில், ‘கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, இடிபாடுகளின் அடியில் இருந்து ஒரு குரல் கேட்டது. இதையடுத்து, சத்தம் கேட்ட இடத்தில் இடிபாடுகளை கவனமாக அகற்றினோம். அங்கு பிரக்யா ஜடேஜா என்பவரின் கைகள் மற்றும் கால்களின் மீது இடிந்த சுவரின் துண்டுகள் கிடந்தன. ஆனாலும், எங்களை பார்த்த அவர், ‘எனது இரு கால்களை வேண்டுமானால் வெட்டிக் கொள்ளுங்கள். விரைந்து என்னை உயிருடன் காப்பாற்றுங்கள். இல்லையெனில் நான் இறந்து விடுவேன்’ என கதறினார்.

    இதைதொடர்ந்து, சக வீரர்களுடன் அவரை உயிருடன் பத்திரமாக மீட்டோம். அவருடன் சேர்த்து இதுவரை 11 பேரை இடிபாடுகளில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளோம். இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிவதில் நவீன கேமராக்களை பயன்படுத்தி வருகிறோம். உள்ளூர் மக்களும் உதவிசெய்து வருகின்றனர். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×