search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் - புதிய ரூ.200 நோட்டு புழக்கத்திற்கு வருகிறது: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
    X

    ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் - புதிய ரூ.200 நோட்டு புழக்கத்திற்கு வருகிறது: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

    புதிய ரூ.200 நோட்டுகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் 2,000 ரூபாய் நோட்டை சில்லரையாக மாற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டு அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது.

    இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பது 5 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. தவிர, நடப்பு நிதியாண்டில் இந்த மதிப்பிலான பணத்தை அச்சிடும் திட்டமும் இல்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உடனடியாக புதிய 2,000 ரூபாய் நோட்டு அச்சிட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.



    இந்த ரூபாய் நோட்டை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் விதமாக ரூ.100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிடுவதில் தற்போது ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது.

    குறிப்பாக, ரூ.200 நோட்டு அச்சிடும் பணி மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் ஏற்கனவே தொடங்கி விட்டது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் இந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும். முதலில், 100 கோடி எண்ணிக்கையிலான 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு கொண்டு வரப்படும். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரூ.200 நோட்டுகள் ஏ.டி.எம். மையங்களில் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்த பின்பு, ரூ.2,000 நோட்டுகளின் வினியோகம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது” என்றார். 
    Next Story
    ×