search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதிஷ்குமாருடன் மோதல்: மாயாவதி- மாஞ்சியுடன் கைகோர்க்கும் லாலுபிரசாத்
    X

    நிதிஷ்குமாருடன் மோதல்: மாயாவதி- மாஞ்சியுடன் கைகோர்க்கும் லாலுபிரசாத்

    பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உடனான மோதல் போக்கு காரணமாக மாயாவதி மற்றும் மாஞ்சியுடன் கைக்கோர்க்க லாலு பிரசாத் யாதவ் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதல்- மந்திரியாக இருக்கிறார்.

    ஆனால், சமீப காலமாக நிதிஷ்குமாருக்கும், லாலு பிரசாத்துக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் மாநிலத்தின் துணை முதல்- மந்திரியாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரெயில்வே முறைகேடு தொடர்பாக லாலுபிரசாத், அவரது மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    எனவே, தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் கட்டளையிட்டார். ஆனால், அவர் இதுவரை பதவி விலகவில்லை.

    இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட சமாதான முயற்சியும் எடுபடவில்லை. தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்தே தீர வேண்டும் என்று நிதிஷ் குமார் பிடிவாதமாக இருக்கிறார்.

    எனவே, தேஜஸ்வி யாதவ் விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

    இந்த மோதல் போக்கு காரணமாக ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.




    இந்த நிலையில் நிதிஷ் குமாருக்கு எதிராக புதிய அரசியல் களத்தை உருவாக்க லாலுபிரசாத் திட்டமிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோருடன் கைகோர்க்க அவர் விரும்புகிறார்.

    ஜிதன்ராம் மாஞ்சி கடந்த ஆட்சியில் நிதிஷ்குமார் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் நிதிஷ்குமாரால் முதல்-மந்திரியாக ஆக்கப்பட்டார். அடுத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஜிதன்ராம் மாஞ்சி நீக்கப்பட்டார்.

    இதையடுத்து ஜிதன்ராம் மாஞ்சி இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் போட்டியிட்டார். அதில், அவரது கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், மாநிலத்தில் 5 சதவீதம் ஓட்டுகளை இந்த கட்சி பெற்றது. ஜிதன்ராம் மாஞ்சி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். எனவே, அவருடைய சமூகத்தை சேர்ந்தவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.

    எனவே, ஜிதன்ராம் மாஞ்சியுடன் கூட்டணி அமைத்தால் அந்த ஓட்டுகள் தனது அணிக்கு கிடைக்கும் என்று லாலுபிரசாத் கணக்கு போட்டுள்ளார்.

    அதேபோல் மாயாவதிக்கு பீகாரில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. தலித் மக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். அவரது கட்சிக்கு 14 சதவீத செல்வாக்கு உள்ளது.

    எனவே, மாயாவதியுடன் கூட்டணி அமைத்தால் அந்த ஓட்டுகளும் தனது அணிக்கு வரும் என்று லாலுபிரசாத் கருதுகிறார். இதனால் தான் சமீபத்தில் மாயாவதி தனது மேல்-சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்த போது, அவரை பீகாரில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்ய தயாராக இருப்பதாக லாலுபிரசாத் அறிவித்தார்.

    இது மட்டுமல்ல, தேஜஸ்வி யாதவ் கடந்த வெள்ளிக்கிழமை மாயாவதியை சந்தித்து பேசி உள்ளார்.

    ஏற்கனவே லாலு பிரசாத்துக்கு யாதவர்கள் ஓட்டு பக்கபலமாக உள்ளது. பீகாரில் 12.5 சதவீதம் முஸ்லிம் மக்கள் உள்ளனர். அவர்களிலும் பெரும்பாலானோர் லாலு பிரசாத்தை ஆதரிக்கிறார்கள். மேலும் இந்த கூட்டணிக்குள் காங்கிரசையும் கொண்டுவர அவர் முயற்சிக்கிறார்.

    எனவே, இப்போது அவர் அமைக்க திட்டமிட்டுள்ள கூட்டணி உருவானால் பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை பெறலாம். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அது சாதகமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

    அதோடு நிதிஷ் குமாருக்கும் சரியான பதிலடி கொடுப்பதாக அமையும் என்றும் அவர் நினைக்கிறார்.
    Next Story
    ×