search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதல்-மந்திரியான லாலுபிரசாத் மகனுக்கு நிதீஷ்குமார் மீண்டும் ‘கெடு’
    X

    துணை முதல்-மந்திரியான லாலுபிரசாத் மகனுக்கு நிதீஷ்குமார் மீண்டும் ‘கெடு’

    பீகார் மாநில துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவ், ஊழல் குற்றச்சாட்டு குறித்து 28-ந்தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்டீரிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. முதல்-மந்திரியாக நிதீஷ் குமாரும், துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியும் உள்ளனர்.

    இந்த நிலையில் 2006-ம் ஆண்டு ரெயில்வே மந்திரியாக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரெயில்வே ஓட்டல்களை வாடகைக்கு விட்டதில் பல கோடிக்கு தில்லு முல்லு செய்திருப்பதாக கூறி கடந்த மாதம் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் லாலுவின் மகனும் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றுள்ளது.

    இது முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க அவர் தேஜஸ்விக்கு உத்தரவிட்டார். ஆனால் லாலு பிரசாத் குடும்பத்தினர் அதை கண்டு கொள்ளவில்லை.

    தேஜஸ்வி, துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும் லாலு அறிவித்தார். இதனால் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், ராஷ்ட்டீரிய ஜனதா தளத்துக்கும் இடையே மோதல் முற்றியது. இதில் சமரசம் செய்ய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.



    இந்த நிலையில் நிதீஷ் குமார் தனது முடிவில் மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று இந்த விவகாரத்தை கிளப்பிய நிதீஷ்குமார் புதிய கெடு ஒன்றை தேஜஸ்விக்கு விடுத்துள்ளார். 28-ந்தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    நிதீஷ்குமாரின் புதிய கெடு காரணமாக பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஆலோசிக்க இன்று ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நிதீஷ்குமார் கூட்டியுள்ளார்.

    அதுபோல ராஷ்ட்டீரிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டமும் இன்று நடக்கிறது. இதனால் இந்த விவகாரத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×